ADDED : ஜூன் 29, 2026 11:45 PM

திருப்பூர்: அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பு மாலை 3:00 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாகனங்களையும் தயார் நிலையில் நிறுத்தியிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தி.மு.க.வினர் மட்டுமே வந்தனர். பின்னர், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ் தலைமையில், வடக்கு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் முன்னிலையில் சில மீட்டர் துாரம் கோஷமிட்டபடி சென்ற தி.மு.க.வினர், போலீசார் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி கைது செய்யப்பட்டனர்.
அவர்களை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 50 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அனுப்பர்பாளையம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அனுப்பர்பாளையத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. தடையை மீறி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற, 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
