/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறைச்சி கழிவுகளால் திசை மாறும் நாய்கள்! நிரந்தர தீர்வு இல்லாமல் பாதிப்பு
/
இறைச்சி கழிவுகளால் திசை மாறும் நாய்கள்! நிரந்தர தீர்வு இல்லாமல் பாதிப்பு
இறைச்சி கழிவுகளால் திசை மாறும் நாய்கள்! நிரந்தர தீர்வு இல்லாமல் பாதிப்பு
இறைச்சி கழிவுகளால் திசை மாறும் நாய்கள்! நிரந்தர தீர்வு இல்லாமல் பாதிப்பு
ADDED : ஏப் 11, 2025 10:18 PM
உடுமலை; திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் ஈர்க்கப்படும் தெருநாய்கள், கால்நடைகளை கடிக்கும் பிரச்னை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது. நகர எல்லையான ராஜவாய்க்கால் பள்ளம், தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி பிரிவு, தாராபுரம் ரோடு, உப்பாறு ஓடை உள்ளிட்ட பல இடங்களில், நாள்தோறும் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் கண்டுகொள்வதில்லை. மழை நீர் ஓடைகள், ரோட்டோரங்களில் வீசப்படும் கழிவுகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, இறைச்சிக்கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவதால், சில நாட்களில், அப்பகுதியில், நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் மட்கும் முன், அதிலிருந்து நோய்க்கிருமிகள் கால்நடைகளுக்கு பரவுகின்றன.
திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால், ஈர்க்கப்படும் தெருநாய்கள், சில நாட்களில், கால்நடைகளை விரட்டி கடிக்கும் நிலைக்கு மாறி விடுகின்றன. பல்வேறு பகுதிகளில், ஆடுகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால், கால்நடைகள் உயிரிழப்பதுடன், தோட்டத்து சாளைகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறைச்சி விற்பனையாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டது. இப்பிரச்னைக்கு, உடுமலை பகுதியிலுள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் வாயிலாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
உள்ளாட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இது குறித்து, பல முறை மனு கொடுத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.