ADDED : அக் 19, 2024 12:38 AM

தீபாவளி கொண்டாட்டங்களுக்காக புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக திருப்பூரில் முக்கிய கடைகள் அமைந்துள்ள கடை வீதிகள், வர்த்தக பகுதியில் வழக்கத்தை விட அதிகளவிலான வாகனங்கள், வாடிக்கையாளர் கூட்டம் காணப்படுகிறது. நகரின் முக்கிய ரோடுகளில் கடும் வாகனப்போக்குவரத்து ஏற்பட்டு, பெரும்பாலான நேரம் கடும் நெரிசல் நிலவுகிறது.
வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகர போலீசார் நகரப் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடை வீதிகள் அமைந்த பகுதிகளில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் கண்காணிப்பு பணிக்கு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாதசாரிகள் வசதிக்காக ரோட்டோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.மத்திய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் வழக்கமான போலீஸ் பாதுகாப்பை விட வார இறுதி நாட்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர போலீஸ் எல்லையில் தீபாவளி பண்டிகை வரை 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.