ADDED : செப் 23, 2024 11:28 PM

திருப்பூரில், குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகாமையில் மதுக்கடைகள் அமைக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்திலும், இரண்டு வெவ்வேறு இடங்களில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
அவ்வகையில், பாரப்பாளையம், ராயபுரம் பகுதி மக்கள் மற்றும் தீபம் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டில், பாரப்பாளையம் - ராயபுரம் ரோட்டில், மதுக்கடை திறக்க பணிகள் நடக்கிறது. அப்பகுதியில், மாநகராட்சி பள்ளி, தெற்கு ரோட்டரி பள்ளி மற்றும் நான்கு கோவில்கள் அமைந்துள்ளன. குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும்; குற்றச் செயல்கள் அதிகரிக்கும்.
மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரி மாணவியர், பாரப்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள், ஜெய்பாவாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா பள்ளி மாணவர்கள், பள்ளி, கல்லுாரிக்கு சென்று வரவும், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லவும், பாரப்பாளையம் - ராயபுரம் ரோடு பிரதானமாக உள்ளது.
இந்த ரோட்டிலுள்ள தீபம் அறக்கட்டளை பாலம் மற்றும் சாலையை, காலை, மாலை நேரங்களில் ஆண்கள், பெண்கள் நடை பயிற்சிக்கு பயன்படுத்துகின்றனர். அப்பகுதியில் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.
மதுக்கடை அமைந்தால், அனைத்து தரப்பு மக்களும் தினம்தினம் இன்னல்களை சந்திக்க நேரிடும்; பொது அமைதி கேள்விக்குறியாகி விடும். பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாரப்பாளையம் - ராயபுரம் ரோட்டில் மதுக்கடை அமைக்க கூடாது. இல்லாவிடில், போராட்டங்கள் நடத்தப்படும்.

