/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பூமிய கெடுக்காதீங்க...' கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை
/
'பூமிய கெடுக்காதீங்க...' கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை
'பூமிய கெடுக்காதீங்க...' கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை
'பூமிய கெடுக்காதீங்க...' கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 28, 2025 05:42 AM

பல்லடம்: சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்டில் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த விசாரணையில், மாநகராட்சி இடத்தை ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு, அரசுக்கு, கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் பாரதிராஜா தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று, மாநகராட்சி இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கண்ணீருடன் கோரிக்கை ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் பேசுகையில், ''இதுவரை மாநகராட்சி குப்பை கொட்டிய இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, பி.ஏ.பி., பாசனம், குடியிருப்புகள், அறிவியல் பூங்கா உள்ளிட்டவை சுற்றிலும் இருக்க, இங்கு குப்பை கொட்ட முயற்சி நடக்கிறது. நாங்கள் முழுக்க முழுக்க நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறோம். ஒருவேளை குப்பை கொட்டப்பட்டால், இப்பகுதி நிலத்தடி நீர் மாசடைந்து விடும். நாங்கள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. உண்மையான ஆய்வறிக்கையை கோர்ட்டுக்கு வழங்குவீர்கள் என நம்புகிறோம்,'' என்று கண்ணீர் மல்க, கைகளை கூப்பி கேட்டு கொண்டார்.
விவசாயிகள் மத்தியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் பாரதிராஜா பேசுகையில், ''ஐகோர்ட் உத்தரவின்படி, எனக்கு கொடுத்த பணியை செய்யவே வந்துள்ளேன். தற்போது, மாநகராட்சி இடம் என்ன நிலையில் உள்ளது, என்னென்ன பணிகள் நடந்துள்ளன என்பதைத்தான் ஆய்வு செய்து அறிக்கையாக வழங்க உள்ளேன். இதில் நான் மாற்றி வழங்குவதற்கு எதுவும் இல்லை. இது பொதுப்படையான ஆய்வறிக்கை. ஒளிவு மறைவு எதுவும் கிடையாது,'' என, கூறினார்.
இதனையடுத்து, பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

