/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரத்தில் இருப்போர் குறித்து கவலையில்லை! மக்கள் நலனே முக்கியம்: மா.கம்யூ., நிர்வாகி
/
அதிகாரத்தில் இருப்போர் குறித்து கவலையில்லை! மக்கள் நலனே முக்கியம்: மா.கம்யூ., நிர்வாகி
அதிகாரத்தில் இருப்போர் குறித்து கவலையில்லை! மக்கள் நலனே முக்கியம்: மா.கம்யூ., நிர்வாகி
அதிகாரத்தில் இருப்போர் குறித்து கவலையில்லை! மக்கள் நலனே முக்கியம்: மா.கம்யூ., நிர்வாகி
ADDED : நவ 19, 2024 06:28 AM
திருப்பூர்; ''அதிகாரத்தில் யார் உள்ளனர் என்று மா.கம்யூ., எப்போதும் பார்ப்பதில்லை; மக்கள் நலனுக்காக மட்டுமே போராட்டம் நடத்துகிறது,'' என, மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் தெரிவித்தார்.
திருப்பூருக்கு நேற்று வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சொத்து வரி, குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்பந்தம் என மாநில அரசு கூறுகிறது. இது உண்மையாக இருந்தாலும், மக்கள் மீது வரி உயர்வை சுமத்தக் கூடாது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். வரி உயர்வுகளை உடனே திரும்பப் பெற வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி கடுமையாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு, 6 சதவீதம் உயர்வு; உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் ஒரு சதவீதம் அபராதம்; ஒவ்வொரு சொத்து வரிக்கும் தனித்தனி பாதாள சாக்கடை கட்டணம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து மா.கம்யூ., கவுன்சிலர் மாநகராட்சி கூட்டத்தில் பேசி, எழுத்துபூர்வமாக கடிதம் அளித்துள்ளார். அண்மையில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம்.
மக்கள் நலனில் அக்கறை உள்ளதாக கூறும், அ.தி.மு.க., இப்போராட்டத்துக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதை கொச்சைப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., பதவிக் காலத்தில் பெரும்பான்மையாக இருந்த போது, சொத்து வரியை உயர்த்தினர். எதிர்த்து போராட்டம் நடத்திய மா.கம்யூ.,வை கேலி செய்தனர். தொடர் போராட்டம் காரணமாக வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள் மீது வரி உயர்வைக் கண்டிப்பதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில், ஆக்கிரமிப்பு செய்யும் அரசின் நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம்.
பாதிப்பு என வரும் போது, எந்த சமரசமும் இன்றி எதிர்க்கிறோம். அதிகாரத்தில் யார் இருந்தாலும் சரி, மக்களைப் பாதிக்கும் பிரச்னை வரும் போது, அதை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம்.
கம்யூ., இரட்டை வேடம் என அ.தி.மு.க., விமர்சிக்கிறது. ஆட்சியில் இருந்தால் வரியை உயர்த்துவது; ஆட்சியை இழந்தால் எதிர்த்து போராடுவது என அவர்கள் தான் இரட்டை வேடம் போடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.