/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா? பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம்
/
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா? பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம்
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா? பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம்
துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க மனமில்லையா? பள்ளிகளின் சுகாதாரத்தில் அரசு அலட்சியம்
ADDED : நவ 11, 2025 10:42 PM
உடுமலை: சொற்ப சம்பளம் வழங்கப்பட்டாலும், பள்ளி சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், துாய்மை பணியாளருக்கு, ஆறு மாதங்களாக அந்த சம்பளமும் வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியத்தால், உடுமலை வருவாய் கோட்ட பள்ளிகளில், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 180க்கும் அதிகமான துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் துாய்மைப்பணிகளை மேற்கொள்ள நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது துவக்க பள்ளிகளில் மாதத்துக்கு, ஆயிரம் ரூபாய்; நடுநிலைப்பள்ளிகளில், 2 ஆயிரம் சம்பளத்துக்கு துாய்மைப்பணியாளர்கள், பணியாற்றி வருகின்றனர்.
இப்பணியாளர்கள் நாள்தோறும் காலை நேரத்தில், இரண்டு மணி நேரம் பள்ளி வளாகத்தில் துாய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்; குறிப்பாக கழிப்பிடங்களை முழுமையாக இப்பணியாளர்கள் சுத்தப்படுத்துகின்றனர்.
நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்படுத்தப்படும் பள்ளி கழிப்பிடங்களில் சுகாதார சீர்கேடு நிலவினால், அவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, மாணவர்களின் சுகாதாரத்தில், இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, சொற்ப அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பளமும், பல மாதங்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிப்பது திருப்பூர் மாவட்டத்தில் தொடர்கதையாக உள்ளது.
தற்போது உடுமலை வருவாய் கோட்டத்திலுள்ள பள்ளிகளில் பணியாற்றும் துாய்மைப்பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் நிலுவையில் உள்ளது. இதனால், அப்பணியாளர்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் இப்பணியை விட்டு விலகினால், பள்ளிகளில் சுகாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாகி விடும்.
வழக்கமாக, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் நிதி, வட்டார கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம், மகளிர் கூட்டமைப்பு வாயிலாக துாய்மைப்பணியாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், அப்பணியாளர்கள் மிகவும் பாதித்துள்ளனர்.
பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவிக்கும் தமிழக அரசு, பள்ளிகளின் சுகாதாரத்துக்கான பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற கல்வியாளர்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கல்வி ஆர்வலர்கள் தரப்பில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விரிவான புகார் மனு அனுப்பியுள்ளனர்.
கேள்விக்குறியாகும் வளாக துாய்மை?
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில், இரவுக்காவலர் இல்லை; சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகளும் உள்ளன. இதனால், இரவு நேரங்களில், பள்ளிகளில் அத்துமீறி நுழைந்து, சமூக விரோத செயல்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளது.
இதனால், பள்ளி வளாகங்களில், சுகாதாரமும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. வளாகங்களை துாய்மைப்படுத்தவும், பள்ளி நிர்வாகத்தினர் திணறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

