/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருந்தும் குளிர்பானம், பழச்சாறுகளில் தரமே பிரதானம்! விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்
/
அருந்தும் குளிர்பானம், பழச்சாறுகளில் தரமே பிரதானம்! விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்
அருந்தும் குளிர்பானம், பழச்சாறுகளில் தரமே பிரதானம்! விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்
அருந்தும் குளிர்பானம், பழச்சாறுகளில் தரமே பிரதானம்! விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்
ADDED : பிப் 11, 2025 12:06 AM

திருப்பூர்; திருப்பூரில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தத் துவங்கியுள்ளது. குளிர்பானங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டுகிறது. ''இவற்றின் தரம் குறித்த விழிப்புணர்வு அவசியம்'' என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத் துறையினர்.
திருப்பூரில் இரவு மற்றும் அதிகாலை பனியின் தாக்கம் இருந்தாலும், பகலில் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. இளநீர், தர்பூசணி, பழச்சாறு, குளிர்பானங்கள், கரும்புச்சாறு, கம்பங்கூழ் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, சாலையோரங்களில், புதிதாக கடைகள் முளைக்கத் துவங்கியுள்ளன.
ஆனால், இவற்றின் தரம் சரியானதாக இருக்குமா என்பது உத்தரவாதம் இல்லை. உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தபோதிலும், தரம் பேணுவதில் பல்வேறு கடைகள் அக்கறை கொள்வதில்லை.
விதிமுறை கட்டாயம்
உணவு பாதுகாப்புத்துறையினர் கூறியதாவது:
விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். பொதுமக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், தயாரிப்பு, காலாவதி தேதி, உள்ளிட்ட முழுமையான விபரங்கள் பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக நிறங்கள் உள்ள குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சுகாதாரம் இல்லாத கடைகளில் பழச்சாறுகள் போன்றவற்றை வாங்கி உண்பதை தவிர்ப்பது அவசியம்.
துாய்மை அவசியம்
வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் சுற்றுப்புறம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. கோடைக்காலங்களில் கரும்புச்சாறு, கம்பங்கூழ், பழச்சாறு உள்ளிட்ட பானங்களை தயாரித்து விற்பனை செய்வோர் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அழுகிய பழம் கூடாது
பழச்சாறு தயாரிக்க அழுகிய பழங்கள் பயன்படுத்துவது, செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் பயன்படுத்துவது, சுகாதாரம் இன்றி இடங்கள் இருப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெற்றோர் குழந்தைகளுக்கு அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை வாங்கி தருவதை தவிர்க்கவேண்டும்.
மாவட்டம் முழுக்க இதுதொடர்பாக தொடர் ஆய்வுகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.