/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுக்கு குடிநீர் என 'பச்சைப்பொய்'; 'பொங்கிய' பெண்கள்
/
பொங்கலுக்கு குடிநீர் என 'பச்சைப்பொய்'; 'பொங்கிய' பெண்கள்
பொங்கலுக்கு குடிநீர் என 'பச்சைப்பொய்'; 'பொங்கிய' பெண்கள்
பொங்கலுக்கு குடிநீர் என 'பச்சைப்பொய்'; 'பொங்கிய' பெண்கள்
ADDED : ஆக 07, 2025 11:18 PM

பல்லடம்; ''தை மாதம் குடிநீர் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தைப்பொங்கல் கடந்துவிட்டது; எங்களுக்கு குடிநீர் கிடைத்தபாடில்லை'' என்று பணிக்கம்பட்டி ஊராட்சி, அம்மன் நகர் பகுதி பெண்கள் குமுறினர்.
பல்லடம் அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சி, அம்மன் நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 15 ஆண்டுகளாக இப்பகுதியில், குடிநீர் வினியோகம் இல்லை; எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று இப்பகுதியினர் குமுறுகின்றனர்.
மாதம் ரூ.2 ஆயிரம் குடிநீருக்காக செலவு
இப்பகுதி பெண்கள் கூறியதாவது:
வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரே ஒரு தொட்டியில், பத்து நாட்களுக்கு ஒருமுறை, 2 குடம் குடிநீர் கிடைக்கும். அதுவும், புழுக்கள் நெளிந்தபடி தான் இருக்கும். இதைப் பயன்படுத்தவே அருவெருப்பாக உள்ளது. சப்பை தண்ணீர், கடல் நீருக்கு இணையாக உப்பு படிந்து உள்ளது. மாதம், 2 ஆயிரம் ரூபாய்க்கு குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.
குடிநீர் வினியோகிப்பதாக கூறி, 10 லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலைத்தொட்டி கட்டி, 4 ஆண்டுகள் ஆகியும் பயன்படாமல் உள்ளது. இதேபோல், 3.94 லட்சம் ரூபாய் செலவில், குழாய் விஸ்தரிப்பு செய்யப்பட்டதாக அறிவிப்பு பலகை உள்ளது. எங்கு, விஸ்தரிப்பு செய்யப்பட்டது, ஒதுக்கிய தொகை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
தொட்டி கட்ட தோண்டிய குழியில் மது பாட்டில்கள்
ஆறு மாதங்கள் முன்பு, தரைமட்ட தொட்டி கட்ட குழி தோண்டப்பட்டு, தற்போது, அதில் மது பாட்டில்கள் தான் சேகரிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் மட்டுமே உள்ளன. தெருவிளக்கு இல்லாமல், இருள் சூழ்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகள் முன், தை மாதம் குடிநீர் வழங்கப்படும் என முன்னாள் ஊராட்சி தலைவர் கூறினார். இரண்டு ஆண்டுகள் தைப்பொங்கல் முடிந்துவிட்டது. குடிநீர் இணைப்புக்கு கட்டாயம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, 10,200 ரூபாய் வசூலித்தார்கள். மேலும், வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் சப்பைத் தண்ணீருக்கு, மாதம், 100 ரூபாய் வசூலிக்கின்றனர். அதுவும், தனியார் குடிநீர் இணைப்பு கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.