/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொட்டு நீர் பாசனம்; 240 ஏக்கர் இலக்கு
/
சொட்டு நீர் பாசனம்; 240 ஏக்கர் இலக்கு
ADDED : ஜூலை 20, 2025 11:13 PM
பல்லடம்; சொட்டு நீர் பாசனம் அமைக்க, 240 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பல்லடம் தோட்டக்கலை துறை, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால், பயிர்களுக்கு தண்ணீர் விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சொட்டுநீர் பாசனமே இதற்கு சிறந்த தீர்வாகும். இதனால், 65 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
சாதாரண தண்ணீரும் இதற்கு போதுமானதாக உள்ளது. அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்த முறையாகும். நிகர லாபமும் நீர் பயன்பாட்டுத் திறனும் இதன் மூலம் கிடைக்கிறது. மத்திய - மாநில அரசுகள், பல்வேறு மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அவ்வகையில், மானியத்துடன் கூடிய பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சொட்டுநீர் பாசனத்தால், 75 சதவீத மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது. பூச்சி மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதல் குறைவதாக ஆய்வு கூறுகிறது. பல்லடம் வட்டாரத்தில், சொட்டுநீர் பாசன திட்டத்துக்கு, 240 ஏக்கர் நடப்பு ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக, 83 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காய்கறி பயிரிடும் சிறு - குறு விவசாயிகளுக்கு, எக்டருக்கு, 1.35 லட்சம் ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, 1.05 லட்சம் ரூபாயும் மானியம் பெறலாம். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சொட்டு நீர் பாசன நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, பல்லடம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தையோ அல்லது 97905 82010 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

