/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதைப்பொருட்கள் கடத்தல்; 'திமிங்கிலம்' சிக்குவதில்லை
/
போதைப்பொருட்கள் கடத்தல்; 'திமிங்கிலம்' சிக்குவதில்லை
போதைப்பொருட்கள் கடத்தல்; 'திமிங்கிலம்' சிக்குவதில்லை
போதைப்பொருட்கள் கடத்தல்; 'திமிங்கிலம்' சிக்குவதில்லை
UPDATED : ஜூன் 07, 2025 01:07 AM
ADDED : ஜூன் 07, 2025 12:29 AM

திருப்பூர்; தமிழகத்தில் சமீப காலமாக தாரளமாக கிடைக்கும் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை, போதை ஊசி, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகளை சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் பயன்படுத்தி சீரழிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக வாராந்திர, மாதாந்திர ஆய்வு கூட்டங்களை நடத்தி பல ஆலோசனைகளை உயரதிகாரிகள் வழங்குகின்றனர்.
கஞ்சா பழக்கம் சர்வ சாதாரணம்
தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் கஞ்சா பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இதற்காக பிரத்யோக தனிப்படை குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்டேஷன் வாரியாக தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள், சிறையில் இருந்து வெளியே வருபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என, பட்டியலிட்டு கண்காணிக்கின்றனர். தொடர்ந்து, குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதோடு, கடைகளுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கெடுபிடி மீறி கஞ்சா கடத்தல்
வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் விற்பனை செய்ய கடத்தி வரும் வடமாநிலத்தினரை கைது செய்கின்றனர். சமீப காலமாக கண்காணிப்பு தீவிரப்படுத்திய காரணத்தால், சிறிய நபர்கள் சிக்கி வருகின்றனர். ஆனாலும் போலீசார் சோதனை மற்றும் கெடுபிடிகளை மீறியும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் எளிதாக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகின்றனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, சோதனை செய்யப்படும் முந்தைய ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கி, அங்கிருந்து வாகனங்களில் மாநகருக்குள் கொண்டு வருகின்றனர். கூரியர், ஆம்னி பஸ்களில் கடத்தி வந்து புழக்கத்தில் விடுகின்றனர்.
சிறிய மீன்களே சிக்குகின்றன
போலீசாரின் வழக்கமான சோதனையில் சிறியளவில் கடத்தி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மாட்டி கொள்கின்றனர். மொத்தமாக விற்பனை செய்பவர்கள் அவ்வப்போது மட்டுமே பெயருக்கு மாட்டுகின்றனர். பெரியளவில் உள்ள நபர்கள் சிக்காமல் இருப்பதால், ஏதாவது ஒரு வகையில் புழக்கத்தை தொடர்கின்றனர். எனவே, சிறிய மீன்களை மட்டும் போலீசார் பிடிக்காமல், புழக்கத்தில் விடும் பெரிய திமிங்கிலங்களையும் பிடிக்க வேண்டும்.