ADDED : பிப் 03, 2025 04:58 AM

திருப்பூர், :   'போதைக்குப் பயன்படுத்துவதற்காக பார்சலில் வலி நிவாரண மாத்திரைகள் அனுப்பப்படுகின்றன. இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்'' என்று திருப்பூரில் கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞர்கள் பலர், போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.  கெடுபிடி காரணமாக மருந்துக்கடைகளில் இவற்றைப் பெற முடியாததால், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்கி வருவதோடு, ஆன்லைன் மூலமும் இவற்றை பெறுகின்றனர்.  கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் உள்ள கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  துணை கமிஷனர் சுஜாதா, ராஜராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
''போதைக்கு வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாத்திரை தொடர்பான பார்சல்களில் சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு வரை கொண்டு போய் விடுகிறது. மனநோயாளி போல்  போதையில் சுற்றி வருபவர்களாக மாறி விடுகின்றனர்.
வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு எடுக்கும் போது, உடல் உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம். பெற்றோர் கண்காணிக்க வேண்டும்'' என்றனர்.
தனி நபருக்கு மாத்திரை  வந்தால், முழுமையான முகவரி இல்லாமல் வரும் பார்சல்களை வழங்கக்கூடாது. கூரியர் நிறுவனத்துக்கு நேரடியாக வாங்க வருபவர்கள் மற்றும் வேறு நபர் வந்தாலும், அவர்களிடம் எழுதி வாங்கி விட்டு, முழுமையாக விசாரித்த பின் தான் கொடுக்க வேண்டும். பார்சல்களில் மற்றும் முகவரியில் சந்தேகம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுஜாதா, துணை கமிஷனர்

