/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடி' மகன்கள் கும்மாளம்; அவிநாசியில் அல்லல்
/
'குடி' மகன்கள் கும்மாளம்; அவிநாசியில் அல்லல்
ADDED : செப் 30, 2024 05:27 AM

அவிநாசி - கோவை ரோட்டில் கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, பிரதான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
மது அருந்த வருபவர்கள் டூவீலர் - கார்களை ரோட்டிலேயே நிறுத்தி செல்வதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
மது அருந்த வருபவர்கள், மது அருந்தி விட்டுச் செல்பவர்களும் ஒரு வழி பாதையில் எதிர் திசையில் வாகனத்தை இயக்குவதால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர்.
அவிநாசியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அடுத்தபடியாக அதிகளவில் பெண் குழந்தைகள் படிக்கும் புனித தோமையர் பள்ளிக்கு செல்லும் பிரதான சாலையாக கால்நடை மருத்துவமனையில் இருந்து முத்துச்செட்டிபாளையம் செல்லும் வழி உள்ளது. தனியார் மருத்துவமனை, அங்கன்வாடி மையம், தாய் செய் நல விடுதி ஆகியவை முத்துச்செட்டிபாளையம் பகுதியில் உள்ளது. கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப்பும் உள்ளது.
கடையில் அமைந்துள்ள பார் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. குடித்துவிட்டு ஆங்காங்கே அதீத போதையில் விழுந்து கிடக்கும் 'குடி'மகன்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பதால் மாணவிகள், பெண்கள் என பலதரப்பட்டோர் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர். குடிமகன்கள் பரஸ்பரம் சண்டையிட்டு பாட்டில்களை உடைத்து ரோட்டில் போடுகின்றனர்.
பாரில், மது விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களிலும் சக்கைப்போடு போடுகிறது. கடையை மாற்றுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நடவடிக்கை இல்லை.
அருவருக்கத்தக்க செயல்கள்
அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு - சேலம் - பெங்களூரு என செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்லும் பிரதான பஸ் ஸ்டாப்பாக செயல்பாட்டில் உள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. டூவீலர் மற்றும் கார் ஸ்டாண்டும் உள்ளது.
மது அருந்தி விட்டு வரும் 'குடி'மகன்கள் ஆங்காங்கே நின்று தகாத வார்த்தையில் பேசிக் கொண்டு வாய் தகராறில் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்கள் கூடும் இடத்தில், நிழற்குடையில் அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடப்பதும் கடைகள் முன்பு வாந்தி எடுப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களிலும் 'குடி'மகன்கள் ஈடுபடுவதாக கடை உரிமையாளர்கள் வேதனைப்படுகின்றனர்.
பொதுமக்கள், வணிகர்கள், மாணவிகள் மருத்துவமனைக்கு செல்பவர்கள், பயணிகள் என அதிகளவில் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இது விதிமுறைகளை மீறிய செயல் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.