ADDED : நவ 04, 2024 09:36 PM
உடுமலை ; கல்லாபுரத்தில், உலர்களம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில், அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக, நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
சீசன் சமயங்களில், அரசு கொள்முதல் மையம் அமைக்கப்படுவதில்லை. எனவே, நெல்லை உலர வைத்து, வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், அப்பகுதியில், போதிய உலர்கள வசதியில்லை. விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு, பாலங்களில், நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.
கல்லாபுரத்தில், நெல்லை காய வைக்க உலர்களமும், இருப்பு வைக்க குடோன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல், கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.