
லோக்சபா தேர்தலையொட்டி, கட மையே கண்ணெனக் கருதி, மாவட்டத்தில், இரவு - பகலாக அரசு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், லோக்சபா தேர்தலை திறம்பட நடத்துவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் பணி மேற்கொள்வதற்காக, 16 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார், துணை தாசில் தார், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள், வங்கியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பொருட்களை தொகுதிவாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்புவது, கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை கையாளுவது; தேர்தல் பணிக்கு தேவையான வாகனங்களை தேர்வு செய்து கொடுப்பது, தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் என, பல்வேறு தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வார விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அரசு அலுவலர்கள் ஓய்வு எடுப்பர். தேர்தல் காரணமாக, தற்போது, வார விடுமுறை நாளிலும், விறுவிறுப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
வழக்கமாக பணி முடித்து மாலை, 6:00 மணிக்கு வீடு திரும்பும் அரசு அலுவலர்கள், இரவு - பகல் பாராமல் தேர்தல் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ஏழு தளங்களில் உள்ள அனைத்து துறை அலுவலகங்கள்; கூட்ட அரங்கங்களும் மூடப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் பிரிவில் மட்டும், வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேர்தல் பணியில் மூழ்கியிருந்தனர்.

