/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாய ஆலை உரிமையாளர்கள் புது அவதாரம்!
/
சாய ஆலை உரிமையாளர்கள் புது அவதாரம்!
ADDED : டிச 16, 2024 12:33 AM

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முதுகெலும்பாக சாய ஆலைகள் விளங்குகின்றன. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' உள்ளிட்ட தாங்கள் பயன்படுத்தும் மாசற்ற தொழில்நுட்பங்களை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும், பின்னலாடை இறக்குமதி நாடுகளுக்கு திருப்பூரின் சுற்றுச்சூழல் சிறப்பை உணர்த்தும் வகையிலும் 'புதிய அவதாரத்தை'சாய ஆலை உரிமையாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக, புத்தாக்கம் - நிலைத்தன்மைக்குழு மற்றும் ஐந்து துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னலாடை உற்பத்தியில், சாயத்தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை குழு மற்றும் ஐந்துதுணை குழுக்களை அமைத்துள்ளது.
நீர் - உப்பு பயன்பாடு குறைப்பு
திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்கின்றன. இதன்மூலமாக, தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர், மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.
சாய ஆலைகளில், தண்ணீர் பங்களிப்பு, ஒரு கிலோ துணிக்கு. 10 லிட்டர் என்ற நிலை மாறி, மூன்று லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. உப்புத்தன்மை மிகுந்த 'பிரெய்ன் சொல்யூசன்' பிரித்து எடுத்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது; இதனால், உப்பு பயன்பாடும் குறைந்துவிட்டது.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் பின்பற்ற அதிக செலவாகிறது. இருப்பினும் இதற்கேற்ற பலன்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், சாய ஆலை உரிமையாளர்களிடம் உள்ளது.
ஆவணப்படுத்த திட்டம்
மத்திய, மாநில அரசு களின் மானிய உதவிகளையும், இதர சலுகைகளையும் பெற, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் உள்ளிட்ட, பசுமை சார் உற்பத்தி சேவையை ஆவணப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வு கூட்டம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் நடந்தது. தலைவர் காந்திராஜன் தலைமை வகித்தார்; பொதுசெயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகராக, 'அடல் இன்குபேஷன்' மைய ஆலோசகர் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
உருவான குழுக்கள்
ஆலோசகர் வழிகாட்டுதலுடன், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து வகை துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சந்தானம் தலைமையில், செந்தில் துணை தலைவராக இருக்கும் குழுவின் கீழ், ஐந்து துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை சுழற்சி மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க துணை குழு, பொருளாளர் மாதேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இயற்கை சாயம் மற்றும் நிலையான பொருட்கள்; தரநிலைகள் மற்றும் சான்றிதழ்கள் குழு; பைலட் திட்டம் மற்றும் புது திட்ட குழு; திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி குழு ஆகிய துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு ஜவுளி இறக்குமதி நாடுகள், பசுமை சார் உற்பத்தியைத்தான் அதிகம் எதிர்பார்க்கின்றன. திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பசுமை சார் உற்பத்தி என்ற அங்கீகாரம் பெற வேண்டிய நிலை உள்ளது.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு பசுமை சான்றி தழ் கிடைக்க, முதுகெலும்பாக இருப்பது சாயத்தொழில். பின்னலாடை ஏற்றுமதியில், சாயத்தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- நமது நிருபர் -