/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடையில் சாயக்கழிவு; 5 நிறுவனங்கள் சிக்கின!
/
சாக்கடையில் சாயக்கழிவு; 5 நிறுவனங்கள் சிக்கின!
ADDED : ஜூலை 09, 2025 11:08 PM

திருப்பூர்; வீரபாண்டியில், சாயக்கழிவுநீரை நிலத்தில் விட்டு, நிலத்தடி நீர் மாசுபட காரணமான, ரோட்டரி பிரின்டிங் நிறுவனம் உள்பட ஐந்து விதிமீறல் நிறுவனங்கள், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி, 54வது வார்டு, வீரபாண்டி சுற்றுப்பகுதிகளில், சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. கல்லாங்காடு பகுதியில், சாயக்கழிவுநீர் கலந்து, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும்; எவ்வித தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) பாரதிராஜா தலைமையில், பறக்கும்படை பொறியாளர் லாவண்யா உள்பட அதிகாரிகள் குழுவினர், வீரபாண்டியில் ஆய்வு நடத்தினர். இதில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெற்ற, ரோட்டரி பிரின்டிங் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிறுவனம், ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவியபோதும், பிரின்டிங் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்காமல், குழி தோண்டி, ஷோக்பிட் அமைத்து, நிலத்துக்குள் இறக்கியது கண்டறியப்பட்டது. இதனால், அந்நிறுவனத்தின் இயக்கம் முடக்கி வைக்கப்பட்டது. மேல் நடவடிக்கை எடுக்க, மாசுகட்டுப்பாடு வாரிய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
'கொத்தாக' சிக்கியது
திருப்பூர், வாலிபாளையத்தில், சாய்பாபா கோவில் அருகே சாக்கடை கால்வாயில், கடந்த, 7ம் தேதி சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. இது தொடர்பாக, மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், லட்சுமி நகர் சுற்றுப்பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர். பிரிட்ஜ்வே காலனி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில், முறைகேடாக இயங்கிய பட்டன்- ஜிப் டையிங் பிடிபட்டது.
திருப்பூர், சூசையாபுரம் மெயின் ரோட்டில், சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பறக்கும்படை அதிகாரிகள் குழுவினர், ஆய்வு நடந்தினர். அதில், அருகருகே செயல்பட்ட மூன்று, அனுமதி பெறாத பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. நான்கு நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.