/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரையிறுதியில் ஈஸ்ட்மேன், சி.ஆர்.
/
அரையிறுதியில் ஈஸ்ட்மேன், சி.ஆர்.
ADDED : அக் 13, 2025 12:57 AM

திருப்பூர்;நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நேற்றைய காலிறுதியில் வெற்றி பெற்று, ஈஸ்ட் மேன் குளோபல் கிளாத்திங், சி.ஆர்., கார்மென்ட்ஸ் டைகர்ஸ் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அப்துல் கலாம் நினைவு சுழற் கோப்பைக்கான நிப்ட்-டீ பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. நிப்ட்-டீ கல்லுாரியுடன், 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட் இணைந்து நடத்தும் இந்த போட்டியில், 20 ஓவர் கொண்ட காலிறுதி போட்டிகள், நேற்று துவங்கின. முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற எஸ்.டி., வாரியர்ஸ், ஈஸ்ட்மேன் குளோபல் கிளாத்திங் நிறுவன அணியை பேட்டிங்கிற்கு அழைத்தது.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஈஸ்ட்மேன் 118 ரன் எடுத்தது. எஸ்.டி., வாரியர்ஸ் அணியோ, 53 ரன்னில் ஆட்டமிழந்தது. 65 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஈஸ்ட் மேன் அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில், 21 பந்துக்கு 31 ரன்; பவுலிங்கில், மூன்று ஓவர் பந்து வீசி, 8 ரன் மட்டும் கொடுத்து, மூன்று விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு கைகொடுத்த ஈஸ்ட்மேன் வீரர் அஜித்துக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மற்றொரு காலிறுதியில், சி.ஆர். கார்மென்ட்ஸ் டைகர் - குவாலியன்ஸ் இன்டர் நேஷனல் அணிகள் மோதின. முதலாவது பேட்டிங் செய்த சி. ஆர்., கார்மென்ட்ஸ், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 75 ரன் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த குவாலியன்ஸ், 3 விக்கெட் இழப்புக்கு, 78 ரன் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 21 பந்துக்கு 38 ரன் எடுத்ததோடு, பவுலிங்கில் மூன்று விக்கெட் வீழ்த்திய குவாலியன்ஸ் வீரர் சுனில்குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வரும் 26ம் தேதி நடைபெறும் இரண்டாவது காலிறுதி போட்டியில், விக்டஸ் டையிங் - ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் - டெக்னோ ஸ்போர்ட் அணிகள் மோதுகின்றன. வரும் நவம்பரில், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.