/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நற்கதி வழங்குவார் ஈடில்லா அவிநாசியப்பர்!
/
நற்கதி வழங்குவார் ஈடில்லா அவிநாசியப்பர்!
ADDED : பிப் 01, 2024 12:00 AM
திருப்புக்கொளியூர், அவிநாசி தலத்து பெருமைகளை, ஸ்கந்த புராணத்தில், சிவமான்மிய காண்டம் பகுதியில், 60 அத்தியாயங்கள் எடுத்துரைக்கிறது. அதை, இளையான் கவிராயர், தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அதன் மூலம், ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதியான அவிநாசியப்பரின் அருமை, பெருமைகளை சிவனடியார் அறிகின்றனர்.
அக்னி தாண்டவத்தின் போது பிரிந்திருந்த பார்வதிதேவி, சிவபெருமான் மீது தவம் இயற்ற, அவிநாசிக்கு வந்தார்; திருப்புக்கொளியூரில், 1000 ஆண்டுகள் தவமியற்றிய போதுதான், காசி விஸ்வநாதர் வேர்விட்டு வளர்ந்து, அவிநாசியப்பராக தோன்றி ஆட்கொண்டு, அன்னைக்கு வலப்பாகம் அளித்து, கருணாலய செல்வியாக அருளாட்சி புரிய வைத்தார்.
ஈடு இணையற்ற தலம்
ஜோதியாய் நின்ற சிவனின் அடி, முடி காணும்போட்டியில் பிரம்ம தேவர் பொய்யுரைத்ததால், அவிநாசியில் 100 ஆண்டுகள் சிவபூஜை நடத்தி, படைக்கும் தொழிலை மீண்டும் பெற்றார்; அதன் மூலம், இழந்ததை மீட்டுத்தரும் ஈடு இணையில்லா சிவத்தலம் என்ற பெருமையை அவிநாசி பெற்றது.
இந்திரனின் ஐராவதம் வெள்ளை யானை, சாப விமோசனத்துக்காக அவிநாசியப்பரை வழிபட்டு, பேறு பெற்றது. அரக்கியாகிய தாடகை, அவிநாசியப்பரை வேண்டி, புத்திரப்பேறு பெற்றனர். வியாதன் என்ற வேடன், பாலாபிேஷகம் செய்து புத்திரப்பேறு பெற்றான். நாகலோகத்தில் இருந்து வந்த நாகக்கன்னி நற்கதி அடைந்தாள்.சங்க கண்ணன் என்ற வேடனும், தேவலோக ரம்பையும், அவிநாசி தலத்தில் சிவபூஜை செய்து சாபம் நீங்கி, பேறு பெற்றனர். தவறான எண்ணத்துடன் சிவாலயம் புகுந்து, புராண கதை கேட்டு சென்ற எஞ்ஞகுத்தன் என்பவர் முக்தி பெற்றார்.
சிவகணப் பேறு
வடவாட்டில், கவுதம நதிக்கரையில் இருந்த சதுமுகபுரம் என்ற நகரை ஆண்ட தருமசேன மன்னன், அவிநாசியப்பரை தொழுது புத்திரப்பேறு பெற்றான். சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானை வேண்டி, முதலையுண்ட மழலையை மீட்டுத்தந்த வரலாறும், அவிநாசியப்பருக்கு உண்டு.
உமையம்மையுடன், தேவாதி தேவர், அசுரர், வேடன், வியாபாரிகள் முக்தியடைந்தது பலருக்கும் தெரியும். வாயில்லா ஜீவன், அவிநாசித்தலத்தில் முக்தி பெற்று, தீர்க்க துண்டன் என்ற பெயருடன் சிவகணமாக இருக்கும் பேறு பெற்றது.
திருமுருகன்பூண்டி வந்திருந்த, துர்வாச முனிவர் பிண்டம் வைத்து பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்தார். காகத்துக்கு வைத்த சோற்றுருண்டையை, காகம் ஒன்று கவ்வியபடி, தனது குஞ்சுக்காக எடுத்துச்சென்றது. மற்றொரு காகம் அதைத் தட்டிப்பறிக்க முயற்சித்த போது, சோற்றுருண்டை, சிவனடியாரின் திருவோட்டில் விழுந்தது. அவரும் சிவபூஜை செய்து உண்டு பசியாறினார்.
அங்கிருந்து, தனது குஞ்சுக்காக மீண்டும் உணவு தேடி பறந்த காகம், வேடனின் கல் பட்டு அவிநாசியிலேயே மடிந்தது. காகம், தேவ உருவம் பெற்று, கயிலாயம் சென்று வழிபட்டு நின்றது. திருப்புக்கொளியூர் திருத்தலத்தில், சிவனடியாருக்கு உணவு வழங்கியதால், தீர்க்க துண்டன் என்ற பெயருடன் சிவகணமாக இருக்கும் அந்தஸ்தை வழங்கினார் சிவபெருமான்.
முக்தி அளிக்கும் தலம்
ஏழை, பணக்காரர் என்று மட்டுமல்ல; எவ்வித வேறுபாடும் இல்லாமல், எல்லா உயிரினங்களுக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் முக்தி அளிப்பார் என்கிறது தல புராணம்.
காசிக்கு நிகரான அவிநாசியில், அருளாட்சி புரியும் பெருங்கருணை நாயகி அம்மன் உடனமர் அவிநாசியப்பருக்கு நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது. இம்மானுட பிறவியெடுத்த அனைவரும், அம்மையப்பரை அடிபணிந்து தொழுலாம்.
''நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவிநாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே''
என்று, சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்புடன் பாடிய பதிகத்தை, மும்மை சிறப்பு வாய்ந்த அவிநாசி திருத்தலத்தில், அவிநாசி ஆளுடையாரை பாடித்துதித்து, இழந்ததை மீட்டுத்தரும் இறைவனை வேண்டி, நலம்பெற வாழ்ந்து நற்கதி பெறலாம்!