/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அருகாமை பள்ளி' இருந்தும் கட்டமைப்பு இல்லை வசதிகளை ஏற்படுத்த கல்வியாளர்கள் வேண்டுகோள்
/
'அருகாமை பள்ளி' இருந்தும் கட்டமைப்பு இல்லை வசதிகளை ஏற்படுத்த கல்வியாளர்கள் வேண்டுகோள்
'அருகாமை பள்ளி' இருந்தும் கட்டமைப்பு இல்லை வசதிகளை ஏற்படுத்த கல்வியாளர்கள் வேண்டுகோள்
'அருகாமை பள்ளி' இருந்தும் கட்டமைப்பு இல்லை வசதிகளை ஏற்படுத்த கல்வியாளர்கள் வேண்டுகோள்
ADDED : நவ 02, 2024 11:09 PM
திருப்பூர்: 'வரும் கல்வியாண்டுக்குள் அரசுப்பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லை என்பது பெற்றோரின் ஆதங்கம்.
இது குறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது; கல்வியில் உயர்ந்த மற்றும் வளர்ந்த தேசங்கள் என்ற வரிசையில், அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, கியூபா போன்ற நாடுகள் பட்டியிலிடப்படுகின்றன. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கல்வியறிவு தான் அடிப்படை காரணம் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்த வகையில் இந்த நாடுகள் வளர்ந்ததற்கான காரணம் கல்வி தான்; அதை வழங்கியது 'அருகாமைப் பள்ளிகள்' என்கிற கட்டமைப்பு.
'அருகாமைப் பள்ளிகள்' என்ற நடைமுறை தமிழகத்திலும் இருக்கிறது என்பது பாராட்டக்கூடிய விஷயம். அதாவது, ஒரு கி.மீ., க்குள் ஆரம்பப்பள்ளி, 3 கி.மீ.,க்குள் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ.,க்குள் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்பது தான் இந்த அருகாமை பள்ளியின் கட்டமைப்பு. தமிழக அரசின் கல்விமுறை, இந்த அடிப்படையில் தான் இருக்கிறது.
'அருகாமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு மொழி, இனம், மத பின்னணியை கொண்டவர்களை ஒரே வகுப்பறையில் கல்வி பயில வைக்க முடியும். 'வகுப்பறை' என்பது அந்த பகுதியின் வேறுபட்ட பின்னணியை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் இடமாக இருக்கும்.
இதன் வாயிலாக ஜாதி, மதம், மொழி உள்ளிட்ட பிரிவினைகளுக்கு இடையேயான இணக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனை ஊக்குவிக்கப்படுகிறது. வகுப்பறையில் ஏற்படும் இந்த இணக்கத்தை, சமூகத்துக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும். ஒரு மேம்பட்ட சமூக இணக்கத்தையும் சகிப்புத்தன்மையும் 'அருகாமை பள்ளி'களை உருவாக்குவதன் வழியாகத் திட்டமிடலாம்' என பரிந்துரைத்திருந்தது கோத்தாரி கமிஷன்.
அதன் அடிப்படையில் தான் கல்விக்கூடங்கள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய அவசியம். அத்தியாவசிய தேவையும் கூட.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.