/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க தகுதியான கட்டடம்; தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம்
/
புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க தகுதியான கட்டடம்; தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம்
புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க தகுதியான கட்டடம்; தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம்
புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க தகுதியான கட்டடம்; தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஜூலை 17, 2025 10:15 PM
உடுமலை; தேர்தல் கமிஷன், 1,200 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்திய நிலையில், ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிதாக அமைக்க தகுதியான கட்டடங்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை இலக்காகக்கொண்டு, இந்திய தேர்தல் கமிஷன், புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
வாக்காளர்கள் வசதிக்காக, தற்போது, 1,200 வாக்காளருக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 2,536 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இதில்,உடுமலை தொகுதியில், 168 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதியில், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 771 ஆண்கள், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 116 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 36 பேர் என, 2 லட்சத்து, 68 ஆயிரத்து, 918 பேர் உள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 739 ஆண்கள், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 338 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 18 பேர் என, மொத்தம், 2 லட்சத்து, 40 ஆயிரத்து, 95 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில், 119 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 1,200க்கும் மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்கும்பணியில் தேர்தல் பிரிவினர் வேகம்காட்டிவருகின்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், 578 ஓட்டுச்சாவடிகளில், 1,200க்கும் மேல் வாக்காளர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், 70க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், 1,200க்கு மேல் வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரே மையத்தில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் எண்ணிக்கை சீராக இருக்கும் வகையில், மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு, 1,200க்கு மேல் வாக்காளரை கொண்ட ஓட்டுச்சாவடிகளிலிருந்து, கூடுதல் வாக்காளர்களை பிரித்து, ஒரே வளாகத்தில் செயல்படும், குறைவான வாக்காளரைக்கொண்ட ஓட்டுச்சாவடியுடன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் போது, வாக்காளர்கள் வசதியை கருத்தில் கொண்டு, புதிய ஓட்டுச்சாவடி மையங்களும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, வாக்காளர் வசிப்பிடத்திலிருந்து 2கி.மீ.,க்குள், புதிய ஓட்டுச்சாவடிகளை அமைக்க தகுதியான, கட்டடங்களை கண்டறியும் பணியும் நடைபெற்றுவருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து, ஆலோசனை நடத்தி, ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது, புதிய ஓட்டுச்சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்டவை இறுதி செய்யப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.