/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டண உயர்வு எதிரொலி: ஜவுளி ஆர்டர்கள் கைநழுவும்?
/
மின் கட்டண உயர்வு எதிரொலி: ஜவுளி ஆர்டர்கள் கைநழுவும்?
மின் கட்டண உயர்வு எதிரொலி: ஜவுளி ஆர்டர்கள் கைநழுவும்?
மின் கட்டண உயர்வு எதிரொலி: ஜவுளி ஆர்டர்கள் கைநழுவும்?
ADDED : ஜூலை 04, 2025 11:12 PM
பல்லடம்; ஜவுளி தொழில் துறைக்கு மின் கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என, விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அரசுக்கு அதிக வருவாயும், தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்ததாகவும் ஜவுளி தொழில் துறை உள்ளது. அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, அதிக விசைத்தறிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
மூலப் பொருள் பற்றாக்குறை, தொழிலாளர் தட்டுப்பாடு, பஞ்சு நுால் விலை ஏற்ற இறக்கங்கள் என, பல்வேறு காரணங்களால், ஜவுளி தொழில் துறை நலிவடைந்துள்ளது.
அதிலும், கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, கடன் வட்டி விகிதம் உயர்வு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அடுத்தடுத்த பிரச்னைகளால், ஜவுளி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஓ.இ., மில் உரிமையாளர்களின் நுால் வினியோகம் நிறுத்தம் என, அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இதற்கிடையே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அருகிலுள்ள மஹாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்கள், தொழில் துறைகளுக்கு, மின் கட்டணத்தில் சலுகைகளை அளித்துள்ளன.
ஆனால், தமிழக அரசு தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதனால், பஞ்சு, நுால் விலை உயர்வதுடன், துணிகளின் அடக்க விலையையும் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாமல், ஆர்டர்கள் கைநழுவி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மிகவும் நஷ்டத்தில் தொழில் செய்து வரும் நிலையில், ஜவுளி தொழில் துறைக்கு மட்டுமாவது, மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லாவிடில், அருகிலுள்ள மாநிலங்களுக்கு தொழில்கள் மாறிவிடும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.