ADDED : ஜன 11, 2025 01:34 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில், 7 யானைகள் உலா வருகின்றன. நேற்று காலை, 8:00 மணியளவில், கே.என்.ஆர்., அருகே மலை உச்சியில், பாறை மீது நின்று, 3 யானைகள் பசுந்தழைகளை உட்கொண்ட போது, ஒரு யானை பாறையில் வழுக்கி உருண்டு, 20 அடி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தது.
தகவலறிந்த குன்னுார் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீர் கொடுத்து, யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானை திடீரென எழ முயன்ற போது, மீண்டும், 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
பிற யானைகள் அங்கு வரக் கூடும் என்பதால், யானை இறந்து கிடந்த பகுதியை நெருங்கிய வனத்துறையினர், பொக்லைன் உதவியுடன் யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்த பின் மாலை, 6:00 மணிக்கு புதைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 15 வயது இருக்கும். பிரேத பரிசோதனை விபரம் வந்தவுடன் பிற தகவல்கள் தெரியவரும்,' என்றனர்.

