/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன விலங்குகளால் பாதிக்கும் பயிர்களை காக்க அவசர எண் தேவை! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
வன விலங்குகளால் பாதிக்கும் பயிர்களை காக்க அவசர எண் தேவை! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வன விலங்குகளால் பாதிக்கும் பயிர்களை காக்க அவசர எண் தேவை! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வன விலங்குகளால் பாதிக்கும் பயிர்களை காக்க அவசர எண் தேவை! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2025 11:43 PM

உடுமலை : வனத்துறை சார்பில் உடுமலையில் நடந்த, விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், போலீஸ், ஆம்புலன்ஸ் போல், வன விலங்குகளிடமிருந்து விவசாயிகளை காக்கும் வகையிலும், தகவல் கொடுத்தால் உடனடியாக வரும் வகையிலும், வனத்துறையிலும் அவசர எண் மற்றும் நவீன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
உடுமலையில் வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வனச்சரக அலுவலகத்தில் நேற்று நடந்தது. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் பேசியதாவது: வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி, வன எல்லையிலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமங்கள் வரை காட்டுப்பன்றிகள் பரவியுள்ளன.
இவற்றால், தென்னை, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் என அனைத்து பயிர்களும் சேதமடைந்து வருகின்றன. ஓடைகள், குளம், குட்டைகளில் பதுங்கியுள்ள அவை, கூட்டம், கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
பயிர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகள் மற்றும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பயிர் சேதம் குறித்து மட்டுமல்ல, உயிர்ச்சேதம் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2018 போராட்டத்தின் போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் உறுதியளித்தனர். ஆனால், இது வரை அறிவிப்பு இல்லை. உடனடியாக வன விலங்கு பட்டியலிலிருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காக்க, வண்ணச்சேலை, கம்பி, கயிறுகளால் தடுப்பு என பல ஆயிரம் செலவழித்தாலும் பயனில்லை.
யானைகளால் சேதம்
திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை பகுதியில், யானைகள் புகுந்து, தென்னையை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. வன எல்லையில், வனத்துறையால், சோலார் மின் வேலி, அகழிகள் வெட்டப்பட்டன.
அவற்றை முறையாக பராமரிக்காததால், மின் வேலிகள் மண்ணோடு மண்ணாகி வீணாகியுள்ளது. காண்டூர் கால்வாய் வழித்தடத்தில் யானைகள் அதிகளவு உள்ளே வந்து, விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வன எல்லை முழுவதும், சோலார் மின் வேலி அமைக்க வேண்டும், அதே போல், மலைப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில்,வேளாண் பொறியியல் துறை சார்பில், 50 முதல், 70 சதவீதம் மானியத்தில், விவசாய நிலங்களுக்கு சோலார் மின் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டாக அத்திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவும், வனத்துறை சார்பில் வன விலங்குகள் நுழையாதவாறு, சந்தையில் உள்ள மருந்துகளை வழங்க வேண்டும்.
மருள்பட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மயில்கள் வசிக்கின்றன. இவை, மருள்பட்டி, கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம், பாப்பான்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில், பயிர் செய்ய முடிவதில்லை. பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும், இழுபறியாகிறது.
தற்போது, தென்னை சாகுபடிக்கு, தென்னங்கன்று ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி நடவு செய்கிறோம். 10 ஆண்டு வளர்ந்த மரத்தை, காட்டுப்பன்றி சேதப்படுத்தினால், 500 ரூபாய் வழங்கப்படுகிறது. மக்காச்சோளம் சாகுபடிக்கு, ரூ.60 ஆயிரம் செலவழித்தால், 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
வனத்துறையில் நவீன தொழில் நுட்பங்களை அமல்படுத்த வேண்டும். போலீஸ், தீயணைப்பு துறையில் உள்ளது போல், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வந்தால், உடனடியாக தகவல் கொடுக்க வனத்துறையிலும் அவசர தொலைபேசி எண் வழங்கவும், அடுத்த அரை மணி நேரத்தில் வனத்துறை குழு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து வனச்சரகர் மணிகண்டன் பேசியதாவது:
வன விலங்குகளால் பயிர்கள் பாதித்தால், அலைக்கழிப்பு இல்லாமல், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தாலுகா வாரியாக தனி கள அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மொபைல் எண்கள் வழங்கப்படும்.
அவர்களுக்கு தகவல் கொடுத்தால், விண்ணப்பம் முதல், அனைத்து சான்றுகளும் அவர்களே பெற்று, இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வன விலங்குகள் புகுந்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வரும் வகையில், வாகன வசதியுடன், வன அலுவலர்கள், ஊழியர்களை கொண்ட தனி குழு அமைக்கவும், தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கவும், பயிர்களுக்கான இழப்பீடு உயர்த்தவும், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வன எல்லைகளில், பழ வகை மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு, பதில் அளித்தார்.