/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கம்பம் முறிந்தது ஊழியர் படுகாயம்
/
மின் கம்பம் முறிந்தது ஊழியர் படுகாயம்
ADDED : மார் 28, 2025 03:17 AM

திருப்பூர்: மின் இணைப்பை சரி செய்ய, ஊழியர் ஏறிய மின் கம்பம் முறிந்து விழுந்ததில், மின் ஊழியர் காயமடைந்தார்.
திருப்பூர், ஏ.பி.டி., ரோடு பிரிவு மின் வாரிய அலுவலக ஊழியர் சண்முக வடிவேல், 32. நேற்று முன்தினம், காமராஜ் ரோட்டில் உள்ள மரக்கடை சந்து பகுதியில் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டது. உடனே அப்பகுதிக்கு சென்ற அவர், மின் கம்பத்தில் ஏறி பழுது சரி செய்ய முயன்ற போது, ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மின் கம்பம் முறிந்து சாய்ந்தது.
எதிர்புறம் உள்ள சுவற்றில் மோதி சாய்ந்த நிலையில் நின்றது. இதில் சண்முகவடிவேல் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ''மின் கம்பம் கீழ் பகுதி சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டிய வண்ணம் ஆபத்தான நிலையில் நீண்ட நாளாக இருந்தது. இது குறித்து மின்வாரியத்தினர் கண்டு கொள்ளவில்லை. மின் ஊழியர் கம்பத்தில் ஏறியதும் பாரம் தாங்காமல் முறிந்து விட்டது,'' என்றனர்.