/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் பாதுகாப்பு நிச்சயம்... இது லட்சுமி நகரின் லட்சியம்!
/
மக்கள் பாதுகாப்பு நிச்சயம்... இது லட்சுமி நகரின் லட்சியம்!
மக்கள் பாதுகாப்பு நிச்சயம்... இது லட்சுமி நகரின் லட்சியம்!
மக்கள் பாதுகாப்பு நிச்சயம்... இது லட்சுமி நகரின் லட்சியம்!
ADDED : மே 10, 2025 01:12 AM

திருப்பூர் நகரின் பரபரப்பான பல்லடம் ரோட்டில், வித்யாலயம் பகுதியில், அமைதி தவழும் பகுதியாக அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஸ்ரீலட்சுமி நகர். பல்லடம் பிரதான ரோட்டுக்கும், பி.ஏ.பி., வாய்க்கால் கடந்து செல்லும் பகுதிக்கும் இடையில் இக்குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஒரு பிரதான ரோடும் நான்கு குறுக்கு வீதிகளும் அமைந்துள்ளது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குடியிருப்பு பகுதி உருவானது. ஒவ்வொரு மனைப்பிரிவுகள் வீடுகளாக உருமாறியது. ஒரு புறம் பயன்பாட்டில் இல்லாத பி.ஏ.பி., வாய்க்கால் இதன் எல்லையாக இருந்தது. மறு பகுதியில் காலியிடம்.
நுழைவு பகுதி பிரதான ரோடு என இருந்தது. இதனால், வெளியாட்களின் நடமாட்டம் எந்த கட்டுப்பாடும் கண்காணிப்பும் இன்றி நாளுக்கு நாள் விஷமிகள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்தது. வெளி நபர்கள் வருகையால் குடியிருப்பு பகுதியில் தேவையற்ற பிரச்னைகள் எழத் துவங்கியது.
இதற்கு தீர்வு காணும் விதமாக குடியிருப்போர் நலச் சங்கம் உருவானது. அதன் தலைவராக தங்கவேல் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2014 ம் ஆண்டில் இந்த சங்கம் உருவானது. சங்கத்தின் செயலாளர் மந்திரியப்பன் மற்றும் பொருளாளராக திருமூர்த்தி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
மாதந்தோறும், 5ம் தேதி, சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவறாமல் நடக்கிறது. தலைவர் தவிர்த்த பிற பதவிகளுக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாகிகள் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த சங்கம் உருவாக்கப்பட்டதன் முதல் நோக்கமே குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பு என்பது தான்.
அவ்வகையில் இந்த சங்கத்தின் முதல் செயல்பாடே, குடியிருப்பு பகுதியில் நுழையும் பகுதியில், செக்போஸ்ட் மற்றும் செக்யூரிட்டி அறை அமைத்து அங்கு செக்யூரிட்டி நியமனம் செய்தது.
குடிநீர் பிரச்னை இல்லை
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. குடிநீர் தேவையான அளவில் குறைவின்றிக் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட ரோடுகள் தான் பயன்பாட்டில் உள்ளன. பெருமளவு ரோடு சேதம் என்பது இல்லை. தெரு விளக்குகளும் தேவையான அளவில் உள்ளன.
எந்த விதமான குறைகள் இருந்தாலும் சங்கத்தின் சார்பில் அது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிய துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி தான் இப்பகுதியில் குப்பைகள் குவிந்து பெரும் அவதி நிலவியது.
மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து தினமும் துாய்மைப் பணியாளர்கள் வந்து குப்பையை சேகரித்துச் செல்கின்றனர். எங்கள் பகுதிக்கு உரிய சாக்கடை வசதியில்லாத நிலை இருந்தது. அதையும் சங்கத்தின் சார்பில் முன்நின்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில் நடவடிக்கை எடுத்து தற்போதுள்ள சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது.
கழிவுநீர் தேக்கம் உண்டு
தற்போது பிரதான ரோடு பகுதியில் கால்வாயில் குப்பை மற்றும் கழிவு தேங்குவது; உரிய டிஸ்போஸல் பாயின்ட் இல்லாமல், கழிவு நீர் தேங்குவது போன்ற பிரச்னை உள்ளது.பல்லடம் ரோடு, நெடுஞ்சாலையைக் கடந்து கழிவு நீர் செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதை சரி செய்து பிரதான சாக்கடை அமைக்க வேண்டும்.
ஈஷா அமைப்பு மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் அனைத்து வீதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்துள்ளோம்.
சங்கத்தின் சார்பில், விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்ட மிட்டுள்ளோம். இரவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் செக் போஸ்ட் மூடப்படும்.
அதன் பின்னர் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவசர அவசியமாக யாரேனும் வந்தால் கூட உரிய விவரங்கள் பெற்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெருநாய்கள் தொல்லை
ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள காலியிடத்தில் ஏராளமான தெரு நாய்கள் வந்து முகாமிட்டுள்ளன. தெருநாய்கள் பராமரிப்பு மையம் அருகில் உள்ளது. அங்கிருந்து தப்பி வரும் நாய்கள், சிகிச்சைக்குப் பின் வெளியேற்றப்படும் நாய்கள் தான் இங்கு பெரும்பாலும் வந்து விடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.