/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனச்சூழல் பாதிக்கும் வகையில் மரங்கள் ஏலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
/
வனச்சூழல் பாதிக்கும் வகையில் மரங்கள் ஏலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
வனச்சூழல் பாதிக்கும் வகையில் மரங்கள் ஏலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
வனச்சூழல் பாதிக்கும் வகையில் மரங்கள் ஏலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : மே 06, 2025 11:34 PM

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், 2,184 டன் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் மற்ற மரங்களையும் வெட்டி கடத்தும் அபாயம் உள்ளதோடு, கன ரக வாகனங்கள் பயன்படுத்தும் போது, வனச்சூழல் கடுமையாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில், ஆனைமலை புலிகள் காப்பகம், தமிழக - கேரளா மாநில எல்லையில், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன.
யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான், வரையாடு என பல்வேறு வன விலங்குகள், சிறிய உயிரினங்கள், பல்வேறு வகையான அரிய வகை தாவரங்கள், மரங்கள் என அரிய வகை உயிர்ச்சுழற்சி மண்டலமாக உள்ளது.
வனத்தில், மரங்கள், வன விலங்குகள் இறந்தால் கூட, அவற்றை அகற்றாமல், வனத்திலேயே விட வேண்டும். தற்போது, உடுமலை அமராவதி வனச்சரகத்திலுள்ள, சீமைக்கருவேல மரங்களை அகற்ற வனத்துறை பொது ஏலம் விட்டுள்ளது.
உடுமலை வனச்சரகத்தில், 895.61 டன், அமராவதி வனச்சரக பகுதியில், 1,288.53 டன் என, 2,184 டன் மரங்களை வெட்டி, விற்பனை செய்து கொள்ள, 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
மரம் கடத்த வாய்ப்பு
வனப்பகுதியில் உயிருடன் சீமைக்கருவேல மரங்கள் உள்ள நிலையில், மரங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல், எடை குறிப்பிடப்படுவதால், மற்ற விலை உயர்ந்த, அரிய வகை மரங்களையும் வெட்டி கடத்தும் நிலை உள்ளது. உயிருடன் இருக்கும் மரங்களை, எந்த அடிப்படையில் எடை அளவீடு செய்தார்கள் என தெரியவில்லை.
புலிகள் காப்பகமாக உள்ளதால், வனத்திற்குள் உள்ள சீமைக்கருவேல மரங்களை, மலைவாழ் மக்களை கொண்டு வெட்டி, அகற்றாமல் அப்படியே மக்கும் வகையில் விடப்பட்டது.
கடந்தாண்டு, மலைவாழ் மக்கள் வாயிலாக, வெட்டி, வனத்திற்குள் வெளியில் கொண்டு வந்து, 'அட்டி' போட்டு, ஏலம் விடப்பட்டது. நடப்பாண்டு, நேரடியாக மர வியாபாரிகள் உள்ளே சென்று வெட்ட அனுமதியளித்துள்ளது, ஒட்டுமொத்த வனத்தையும் அழிக்கும்.
வனவிலங்குகள் அச்சமடையும்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
வனப்பகுதியில் எங்கும் இல்லாத வகையில், முதல் முறையாக, வனத்திற்குள் சென்று தனியார் மரங்களை வெட்ட அனுமதிக்கப்படுகிறது. சீமைக்கருவேல மரங்கள் மட்டுமின்றி, மற்ற உயர் ரக, அரிய வகை மரங்களையும் வெட்டி கடத்தும் வாய்ப்புள்ளது.
மிகப்பெரிய பரப்பளவில் கண்காணிக்க முடியாது. லாரிகள் நேரடியாக வனத்திற்குள் சென்று ஏற்றும் போது, எந்த மரங்கள் ஏற்றப்பட்டுள்ளது, என தெரியாது.
அதோடு, இயந்திரங்களால் ஆன ரம்பங்கள் கொண்டு அறுத்தும், பொக்லைன், கிரேன், லாரி என நாள் முழுவதும் கன ரக வாகனங்கள் இயக்கும் போது, வன விலங்குகள் அச்சமடையும். சிறிய வகை உயிரினங்கள், மரம், செடி, கொடிகள் என வனம் முழுமையாக பாதிக்கும்.
கடந்தாண்டு, இதே போல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது என்ற பெயரில், பெரிய அளவில் முறைகேடு நடந்ததோடு, வனத்திற்குள், 40 கி.மீ., துாரத்திற்கும் மேல், சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.
தற்போது முறைகேடுகள் நடக்காதவாறு, வனத்திற்குள் இயந்திரங்கள், வாகனங்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. வனச்சூழல் பாதிக்காத வகையில், மலைவாழ் மக்களை கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெளியில் கொண்டு வந்து, ஏலம் விட வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.