/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு போட்டியுடன் சமத்துவ பொங்கல் பெண்கள், குழந்தைகள் குதுாகலம்
/
விளையாட்டு போட்டியுடன் சமத்துவ பொங்கல் பெண்கள், குழந்தைகள் குதுாகலம்
விளையாட்டு போட்டியுடன் சமத்துவ பொங்கல் பெண்கள், குழந்தைகள் குதுாகலம்
விளையாட்டு போட்டியுடன் சமத்துவ பொங்கல் பெண்கள், குழந்தைகள் குதுாகலம்
ADDED : ஜன 16, 2025 04:25 AM
திருப்பூர்,|; திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள், சமத்துவ பொங்கல் வைத்தும், விளையாட்டு போட்டி நடத்தியும் நேற்று பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தைப்பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளாகிய நேற்றும், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர் மற்றும் முதியோர்களும் ஆர்வமாக போட்டிகளில் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 42வது வார்டு, கே.வி.ஆர்., நகர் கிழக்கு பகுதிகளில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சிறுவருக்கான ஓட்டப்பந்தயம், 'லெமன் ஸ்பூன்' போட்டி, சைக்கிள் போட்டி என, பல்வேறு போட்டிகள் நடந்தன. மாலையில் நடந்த விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் குருசாமி, விழா ஏற்பாட்டாளர்கள் பரதவீரன், வாசு, சரஸ்வதி, மாசாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாலிபர் சங்கம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டு கழகம் சார்பில், 30ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா, திருப்பூர் மிஷன் வீதியில் நேற்று நடந்தது. பொருளாளர் ஹரிஹரன், கொடியேற்றி வைத்து, போட்டிகளை துவக்கி வைத்தார். மாதர் சங்கம் சார்பில், காலை சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாக்கு ஓட்டம், பலுான் ஊதி உடைத்தல், ஓவியப்போட்டி, ஓட்டப்பந்தயம், 'ஸ்லோ பைக்', 'லக்கி கார்னர்', கயிறு இழுத்தல், குச்சி சுற்றுதல், உள்ளே -வெளியே ஆட்டம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், மியூசிக்கல் சேர், பொட்டு வைக்கும் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. மாலையில், மாறுவேட போட்டி, கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 'அம்பேத்கர் -காந்தியடிகள்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடந்தது.
தெற்குநகர துணை செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பல்லடம்
பருவாய் கிராமத்தில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. பல்வேறு போட்டிகளில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மாலை, 6.30 மணிக்கு நடனம், நாட்டியம், இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில், அகரம் இயற்கை வழி வேளாண் பண்ணை நிறுவனர் தங்கவேல், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
n பல்லடம் - அறிவொளி நகர் வள்ளுவன் இளைஞர் மன்றம் சார்பில், 8ம் ஆண்டு திருவள்ளுவர் தின விளையாட்டு விழா நடந்தது. காலை, 7.00 மணிக்கு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, சிறுவர் சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னாள் ஊராட்சித் தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார்.
n காரணம்பேட்டை முத்தமிழ் மன்றத்தின் சார்பில், 43ம் ஆண்டு பொங்கல் விழா, திருவள்ளுவர் தின விழா மற்றும் முத்தமிழ் மன்ற ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கோடங்கிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மன்றத்தின் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அவிநாசி
அவிநாசி, ராயம்பாளையம் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 26ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா மாரியம்மன் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பூப்பறிக்கும் விழா மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. உணவுகளையும், இனிப்பு, கார வகைகளையும் கொண்டு வந்து படையலிட்டு சுவாமி கும்பிட்டனர். பெண்கள் கிராமிய பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர்.