/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிரிப்பதுகூட இந்தக்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம்தான்'
/
'சிரிப்பதுகூட இந்தக்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம்தான்'
'சிரிப்பதுகூட இந்தக்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம்தான்'
'சிரிப்பதுகூட இந்தக்காலத்தில் பெரிய அதிர்ஷ்டம்தான்'
ADDED : மார் 17, 2025 01:47 AM

திருப்பூர்;
திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகைச்சுவை முற்றத்தின் பொது செயலாளர் முரளி வரவேற்றார்.
ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் கந்தசாமி, செயலாளர் பூபதி ராஜன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக, பழநி பாலதண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள சுப்பிரமணியனுக்கு, நினைவு பரிசு வழங்கி, நிர்வகிகள் பாராட்டினர்.
'சிரிப்பும்... பொறுப்பும்...' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் சண்முகவடிவேலு பேசியதாவது:
சிரிப்பு என்பது சிறப்பானது; அதிகம் சிரித்தாலும் பொறுப்பில்லை என்பார்கள். இக்காலகட்டத்தில், சிரிப்பதையே பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கின்றனர். முகத்தை இனிமையாக வைத்துக்கொண்டு, நல்ல வார்த்தைகளை பேசுவதையே அறம் என்கின்றனர்.
மனம் எப்படி இருக்கிறது என்பதை, முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது; முகம், மலர்ச்சியாக இருக்க வேண்டும். வாழ்வில் நகைச்சுவை மிகவும் அவசியம்; இன்புற்று வாழ சிரிப்பும் அவசியம்.
இவ்வாறு, சண்முகவடிவேலு பேசினார்.
மனம் சீராக்கும் மருந்து
வழங்குவதும் மனமே
'மனம் என்னும் மேடையின் மேல்' என்ற தலைப்பில், பேராசிரியர் அமுதா ராமானுஜம் பேசியதாவது:
வேதாத்ரி மகரிஷி, பிரம்மநிலையை அரை மணி நேரத்தில் விளக்கிவிடும் ஆற்றல் பெற்றவர்; இன்று மக்களுக்கு விளக்குவது சிரமமாக இருக்கிறது. ஒரு 'செல்' உயிரி போல், மொபைல்போனுடன் வாழும் சூழல் வந்துவிட்டது. காது கேட்பவர்களும், காதொலி கருவியுடன் சுற்றி வருகின்றனர். மனம் என்பது, கண்ணுக்கு காட்டும் உடல் உறுப்பு அல்ல; ஆனால், மனது தான் மனிதனை ஆள்கிறது; மனதில் தோன்றுவதை முகத்தில் மட்டுமே வெளிப்படுத்த முடியும். தவறு செய்வதை மனம் தான் துாண்டுகிறது; மனதை சரிசெய்யும் மருந்தையும், மனதுதான் வழங்குகிறது.
இவ்வாறு, அமுதா ராமானுஜம் பேசினார்.