/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க நெருக்கடி நீடித்தாலும் திருப்பூருக்கு புதிய சந்தை இருக்கிறது!
/
அமெரிக்க நெருக்கடி நீடித்தாலும் திருப்பூருக்கு புதிய சந்தை இருக்கிறது!
அமெரிக்க நெருக்கடி நீடித்தாலும் திருப்பூருக்கு புதிய சந்தை இருக்கிறது!
அமெரிக்க நெருக்கடி நீடித்தாலும் திருப்பூருக்கு புதிய சந்தை இருக்கிறது!
ADDED : அக் 21, 2025 10:58 PM
திருப்பூர்: தீபாவளிக்கு முன்னரும், பின்னரும், பெரும்பாலான திருப்பூர் மக்களின் கேள்வி, 'அமெரிக்கா ஆர்டர் எப்போது திரும்பும்? என்பதுதான். உண்மையில், திருப்பூரின் பெரும்பாலான நிறுவனங்கள், இன்னும் அமெரிக்க ஆர்டர்களை பெரிதும் நம்புகின்றன.
இனியாவது, புதிய சந்தைகள், புதிய தயாரிப்புகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்றகருத்தும் பரவலாக எழுந்துள்ளது.
அமெரிக்கா டேரிப் உயர்வால் ஏற்பட்டது நெருக்கடி போல் தோன்றினாலும், புதிய பாதையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவில் அதிர்ச்சி அசாதாரண வரி உயர்வு என்பது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது. மொத்த வர்த்தகம் மட்டுமல்ல, சில்லரை வர்த்தகமும் சுருங்கிவிட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், குறைந்த லாபத்தில் அதிகப்படியான ஆர்டர் என்ற எதிர்பார்ப்பில் இயங்கி வந்தனர்.
இனிமேல், குறைந்த ஆர்டர் அதிக மதிப்பு என்று மாற வேண்டும்; மதிப்பு கூட்டிய ஆடை தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருப்பூரில் உருவாக்கப்படும், மறுசுழற்சி ஆடைகள், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி ஆடைகள், வெளிநாடுகளில் ஒருமுறை சந்தைப்படுத்தப்பட்டால், அவற்றிற்கான தேவைகள் திடீரென அதிகரிக்கும்.
திருப்பூர் உற்பத்தி நிறுவனங்கள், அதற்காக புதிய தொழில்நுட்பங்களை கையில் எடுக்க வேண்டும். 'ஏஐ' தொழில்நுட்ப வடிவமைப்பு, '3டி' டிசைன்', 'டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம்' என, ஒட்டுமொத்த தொழிற்சாலையையும், ஆன்லைன் வாயிலாக கண்காணிக்கும் வசதிகள் வரவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.
ஐரோப்பிய மக்கள், 'சுற்றுச்சூழல் சான்று மற்றும் 'பசுமை ஆடை என்பதில் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள். விலை உயர்ந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செலவிட தயாராக மாறிவிட்டனர். மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர், அழகான ஆடைகளை விரும்புகின்றனர். எனவே, திருப்பூர் ஏற்றுமதியாளர் புதிய சந்தை வாய்ப்புகளை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை பலரும் துவங்கி உள்ளனர்.
ஜப்பான் மக்கள், சிறிய அளவிலாக இருந்தாலும், தரத்தை அதிகம் எதிர்பார்க்கின்றனர். கைத்திறன், துல்லியம், நீடித்த தன்மை ஆகியவற்றைப் பார்க்கிறார்கள். தையல், துணி தேர்வு, நிற துல்லியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், ஜப்பான் ஒரு நிலையான சந்தையாக மாறும். சிங்கப்பூரில், 'பேஷன் டெக்' விரைவாக வளர்ந்து வருகிறது.
'கூல் டச்' பேப்ரிக்', 'யுவி பாதுகாப்பு பேப்ரிக்' துணிகள் அதிகம் பிரபலமாகியுள்ளன. திருப்பூர் இத்தகைய ஆடை உற்பத்தியில் கால்பதித்தால், புதிய சந்தையில் இடம்பெறும். ஆப்பிரிக்கா, குறைந்த விலை ஆடைகளுக்கான சந்தைகளை கொண்டது; இருப்பினும், வேகமாக வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
அதிக டிசைன் மற்றும் வண்ண மயமான ஆடைகளை விரும்புகின்றனர். தொழிற்சாலை கழிவு துணிகளை கொண்டு, மறுசுழற்சி ஆடை உற்பத்தியை வேகப்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலக அளவில், இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் உள்ள டிசைன் ஸ்டுடியோக்களுடன் இணைந்து புதிய வரிசைகளை(கோ- பிராண்டிங்) உருவாக்கலாம்.
ஒருவேளை அமெரிக்க நெருக்கடி நீடித்தாலும் கூட, ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு சந்தையில் கதவு திறக்கின்றன. புதிய தொழில்நுட்பம், புதிய சிந்தனை, பசுமை மனப்பாங்கு என தொடர்ந்தால், எதிர்காலத்தை நெய்யும் திருப்பூருக்கு, புதிய திருப்பத்தை உருவாக்கும்.
- ஜெய்பிரகாஷ்: 'ஸ்டார்ட் அப்இந்தியா' வழிகாட்டி ஆலோசகர்.: