/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிட் -டெக் 2024' கண்காட்சியால்... எல்லாம் சாத்தியமே! தொழில் அமைப்பினர் வரவேற்பு
/
'நிட் -டெக் 2024' கண்காட்சியால்... எல்லாம் சாத்தியமே! தொழில் அமைப்பினர் வரவேற்பு
'நிட் -டெக் 2024' கண்காட்சியால்... எல்லாம் சாத்தியமே! தொழில் அமைப்பினர் வரவேற்பு
'நிட் -டெக் 2024' கண்காட்சியால்... எல்லாம் சாத்தியமே! தொழில் அமைப்பினர் வரவேற்பு
ADDED : மார் 02, 2024 01:16 AM

திருப்பூர்;'நிட் -டெக்' கண்காட்சியில், நிட்டிங், பிரின்டிங் மற்றும் உப்பில்லா சாயமிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், திருப்பூரின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தியாகுமென, தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், புதிய இயந்திரங்கள் வாங்க, வெளிநாடுகளுக்கு சென்றுவர வேண்டிய நிலமையை, 'ைஹடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' நிறுவனம் மாற்றியது. வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து, திருப்பூரிலேயே, இயந்திர கண்காட்சி நடத்தப்பட்டது. இதனால், அதிநவீன இயந்திரங்கள் வாங்குவது எளிதாகியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'நிட் -டெக்' கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 17வது 'நிட்- டெக்' கண்காட்சி, திருமுருகன்பூண்டி அருகே உள்ள கண்காட்சி மைதானத்தில் நேற்று துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், 325 ஸ்டால்கள் அமைத்துள்ளன.
கண்காட்சி துவக்க விழாவுக்கு, 'நிட்-டெக்' தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். 'பியோ' தலைவர் சக்திவேல், கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சி மலரை, 'டாஸ்மா' தலைவர் வெளியிட, தொழில் அமைப்பு நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். முன்னதாக, கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர். 'நிட்-டெக்' இயக்குனர் ராதாகிருஷ்ணன், தொழில்துறையினருக்கு நினைவு பரிசு வழங்கினார். இணை நிர்வாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி, நன்றி கூறினார்.
---------------------
ரூ.500 கோடிக்கு
வர்த்தக விசாரணை
பின்னலாடை துறை சார்ந்த, புதிய வகை இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஊசி முதல் பேக்கிங் வரை, நவீன இயந்திரங்கள் கண்காட்சியில் உள்ளன. நிட்டிங் பிரிவில் மட்டும், 18 வகையான நிறுவனங்கள், புதிய இயந்திரங்களை வைத்துள்ளன. 'டையிங்' இயந்திரங்களில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனம், உப்பில்லா சாயமிடும் புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. கழிவுகளை 2 சதவீதமாக குறைக்கும்'கட்டிங்' இயந்திரங்கள்; நவீன பிரின்டிங் இயந்திரங்கள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கான இயந்திரங்கள் கண்காட்சியில் அணிவகுத்துள்ளன. இக்கண்காட்சியில், 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடக்குமென எதிர்பார்க்கிறோம்.
- ராயப்பன்
கண்காட்சி தலைவர்
---------------------
தேவைகள் பூர்த்தி
திருப்பூரில் நடக்கும், 17 வது 'நிட்-டெக்' கண்காட்சி, இரண்டு லட்சம் சதுரடியில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. திருப்பூரின் அடுத்தகட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய வகை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- சுப்பிரமணியன்
ஏற்றுமதியாளர் சங்க தலைவர்
---------------------
நன்றிக்கடன்
புதிய அருமையான கண்காட்சி, பலரும் போற்றும் வகையில், நடந்து வருகிறது. கடந்த, 30 ஆண்டுகளாக, கண்காட்சி மூலமாக, திருப்பூர் உட்பட, அனைத்து தொழில்துறைகளும் பயனடைகின்றன. தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில், நவின இயந்திரங்களை அறிமுகம் செய்வதில் கண்காட்சி பங்காற்றுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை, திருப்பூருக்கு கெண்டு வந்து சேர்ப்பதால், 'நிட்-டெக்' கண்காட்சிக்கு, திருப்பூர் தொழில்துறையினர் நன்றிக்கடன் பட்டுள்ளனர். புதிய தொழில்நுட்பத்தால் பயன்பெற, அதிகப்படியான கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். - அப்புக்குட்டி
'டாஸ்மா' தலைவர்
---------------------
அபார வளர்ச்சி
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், கண்காட்சி சிறப்புடன் நடந்து வருகிறது. ஏற்றுமதி பிரிவுக்காக மட்டும், இயந்திரங்கள் வருவதில்லை; உள்நாட்டு பனியன் உற்பத்தியும் இதன்மூலமாக பயனடைகிறது. ஏற்றுமதியை போல், உள்நாட்டிலும் தரமான ஆடைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்றுமதியால் அன்னிய செலாவணி ஈட்டப்பட்டாலும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில், இதுபோன்ற கண்காட்சிகள் பேருதவியாக இருக்கின்றன. உள்நாட்டு பனியன் தொழில் மற்றும் வர்த்தகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெறும்.
ஈஸ்வரன்:
'சைமா' தலைவர்
---------------------
கண்காட்சி மையம்
திருப்பூரில், கண்காட்சியை அறிமுகம் செய்ததே இவர்கள் தான். 1993ல் கண்காட்சியை நடத்துவதில் இருந்த சிரமம் இருந்தது எங்களுக்கும் தெரியும். சிறிய தகர ெஷட் அமைத்து கண்காட்சி நடத்திய நிலைமாறி, சர்வதேச தரத்துடன் கண்காட்சி நடக்கிறது. கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். திருப்பூருக்கு வர்த்தக கண்காட்சி மையம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அடுத்த, 'நிட்-டெக்' கண்காட்சி, திருப்பூரில் அமையும் நிரந்தர கண்காட்சி வளாகத்தில் நடத்தப்பட வேண்டும்.
- ரத்தினசாமி
'நிட்மா 'தலைவர்
---------------------
'டிஜிட்டல்' பிரின்டிங்
உலகம் முழுவதும் 'டிஜிட்டல்' இன்றியமையாததாக மாறிவிட்டது. பனியன் தொழிலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சீனா முன்னோடியாக இருந்தாலும், இந்தியாவும், 'டிஜிட்டல் பிரின்டிங்' தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது. இறக்குமதி செய்த நிலைமாறி, உள்ளூரிலேயே, டிஜிட்டல் பிரின்டிங் மெஷின் வடிமைக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்து.
படித்த இளைஞர்கள், ஆன்லைன் வர்த்தகம் செய்து முன்னேறுகின்றனர். புதிய தொழில்நுட்பத்தை திருப்பூருக்கு கொண்டு வருவதில், இதுபோன்ற கண்காட்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அனைத்து தரப்பினரும், கண்காட்சியை அவசியம் பார்வையிட வேண்டும்.
- ஸ்ரீகாந்த்
'டெக்பா' தலைவர்
---------------------
வரி சலுகை அவசியம்
'நிட்டிங்' இயந்திரங்களை பொறுத்தவரை, ஆறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அதிகம் காட்சிப்படுத்தியுள்ளன. சிங்கிள்ஜெர்சி, ஜக்கார்டு என பலவகை இயந்திரம் வந்துள்ளன. இறக்குமதி மெஷின்களுக்கான உதிரி பாகங்களை, இனி இறக்குமதி செய்ய தேவையில்லை. அனைத்து உதிரி பாகங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய சூழலில், திருப்பூரில், 60 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது; ஒரு லட்சம் கோடியாக உயர்ந்தாலும், தேவையான நிட்டிங் இயந்திரங்கள் வந்துள்ளன. புதிய வகை இயந்திரங்கள இறக்குமதி செய்ய, 28 சதவீத வரியை குறைக்க வேண்டும். மாநில அரசு, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். காற்றாலை, சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
- விவேகானந்தன்
'சிம்கா' தலைவர்
---------------------
தொழில் வளர்ச்சி
முதன்முதலாக, எனது சாய ஆலைக்கு, விஞ்ச் மெஷினை, கண்காட்சி நடத்தும் ராயப்பன் தான், தயாரித்து கொடுத்தார். தற்போது, உப்பு இல்லாமல் சாயமிடும் தொழில்நுட்பம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் சாயத்தொழில் வளர்ச்சி பெற, 'நிட் -டெக்' கண்காட்சியே முக்கிய பங்கு வகிக்கிறது.
- காந்திராஜன்
சாய ஆலை உரிமையாளர்கள்
சங்க தலைவர்
---------------------
உறுதுணை...
'நிட்-டெக்' கண்காட்சி, திருப்பூரின் இன்றைய நிலைக்கு மிக முக்கியமானது. உலக நாடுகள் ஒவ்வொரு துறையில் சிறப்பு பெற்றதாக உள்ளன. தனித்தனியே சென்று பார்வையிட முடியாது. இதுபோல், ஒரே கூரையின் கீழ், அனைத்து தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தும் போது, தொழில் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும்.
- முத்துரத்தினம்
'டீமா' தலைவர்
---------------------
மகிழ்ச்சி!
'நிட்-டெக்' கண்காட்சி, பனியன் உற்பத்தியாளருக்கு மட்டுமல்ல, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்களையும் வழங்கி வருகிறது. இயந்திரம் வாங்க மட்டுமல்லாது, எங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும், திருப்பூரிலேயே வழங்குவது மகிழ்ச்சி. இதுபோன்ற கண்காட்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
- மணி
திருப்பூர் தொழில் கூட்டமைப்பு

