/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரிக்கல்பாளையத்தில் விரைவில் அகழ்வாராய்ச்சி
/
குமரிக்கல்பாளையத்தில் விரைவில் அகழ்வாராய்ச்சி
ADDED : பிப் 20, 2026 05:39 AM

திருப்பூர்: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள் நிறைந்த குமரிக்கல்பாளையம் பகுதியில், விரைவில், அகழ்வாராய்ச்சிப்பணி நடக்கிறது.
திருப்பூர், ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில் துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய அமைப்பினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், 'அப்பகுதியில் பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும்; அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தினர்.
கடந்தாண்டு மத்திய தொல்லியல் குழுவினர், அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பிரம்மாண்ட நடுகல், முதுமக்கள் தாழி, பானைகள், எலும்பு துண்டுகள் என, மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை உறுதிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு கள ஆய்வு மேற்கொண்டனர்.நேற்று, திருச்சி மண்டல உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் முத்துக்குமரன், வெற்றிச்செல்வி ஆகியோர் திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்து பேசினர். களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், குமரிக்கல்பாளையம் ஊர் பிரமுகர் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.உதவி தொல்லியல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் கூறியதாவது;
குமரிக்கல்பாளையத்தில், 3,000ம் ஆண்டுக்கு முந்தைய இரும்புக்காலம் மற்றும் அதற்கடுத்த சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள, இந்திய தொல்லியல் துறை அனுமதியளித்து விட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற கலெக்டரை சந்தித்தோம்; அவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அகழ்வாராய்ச்சி செய்வதன் வாயிலாக, அங்கு எந்த காலத்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர்; அவர்களின் பண்பாடு, கலாசாரம் குறித்து அறிந்துகொள்ளும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால், நாகரிகத்தின் தொன்மையை கொடுமணல் போன்று, பல்வேறு புதிய தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அகழ்வாராய்ச்சி பணி, அடுத்த வாரம் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

