/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாலை 5:00 மணியோடு துாங்க போகும் ஆம்புலன்ஸ் கால்நடை வளர்ப்போர் கடும் அதிர்ச்சி
/
மாலை 5:00 மணியோடு துாங்க போகும் ஆம்புலன்ஸ் கால்நடை வளர்ப்போர் கடும் அதிர்ச்சி
மாலை 5:00 மணியோடு துாங்க போகும் ஆம்புலன்ஸ் கால்நடை வளர்ப்போர் கடும் அதிர்ச்சி
மாலை 5:00 மணியோடு துாங்க போகும் ஆம்புலன்ஸ் கால்நடை வளர்ப்போர் கடும் அதிர்ச்சி
ADDED : பிப் 20, 2026 06:35 AM
பல்லடம்: கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல், விபத்து, கர்ப்ப கால சிகிச்சை ஆகியவற்றுக்காக அரசு கால்நடை மருந்தகங்களை நாடுகின்றனர்.
இதற்காக, கால்நடை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.
இதன்படி, கால்நடைகளுக்கான அவசர மருத்துவ உதவிக்கு, 1962 என்ற, 'டோல் ப்ரீ' எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம், நடமாடும் கால்நடை மருத்துவ குழு, நேரடியாக விவசாயிகளின் இடத்துக்கே வந்து சிகிச்சை அளிக்கும்.
இந்த ஆம்புலன்ஸ் சேவை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், தாலுகா அளவில் இயங்கும் இந்த ஆம்புலன்ஸ் சேவை, 24 மணி நேரமும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'தாலுகா அளவில் உள்ள ஆம்புலன்ஸ்கள் மாலை, 5:00 மணி வரை மட்டுமே இயங்குகின்றன. இரவு நேரங்களில் கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, வாகன போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் எவ்வாறு கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியும். கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம், 24 மணி நேரமும் செயல்பட்டால் மட்டுமே இது முழுமையான பயனளிப்பதாக இருக்கும்' என்றனர்.
இது குறித்து, 1962 டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'திருப்பூர் மாவட்ட அளவில் ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே, 24 மணி நேரமும் இயங்கும்.
மற்றபடி, தாலூகாவில் உள்ள ஆம்புலன்ஸ்கள் மாலை, 5:00 மணி வரை மட்டுமே இயங்கும்' என்றனர்.

