/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி ஊக்கி அதிகளவில் பயன்பாடு; மா மரங்களில் பாதிப்பு
/
வளர்ச்சி ஊக்கி அதிகளவில் பயன்பாடு; மா மரங்களில் பாதிப்பு
வளர்ச்சி ஊக்கி அதிகளவில் பயன்பாடு; மா மரங்களில் பாதிப்பு
வளர்ச்சி ஊக்கி அதிகளவில் பயன்பாடு; மா மரங்களில் பாதிப்பு
ADDED : ஆக 25, 2025 09:26 PM
உடுமலை; 'மா மரங்களில், வளர்ச்சி ஊக்கியை அதிகளவு பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது,' என தோட்டக்கலைத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 1,660 ெஹக்டேர் பரப்பில், மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், இச்சாகுபடி பிரதானமாக உள்ளது.
'மா சாகுபடியில், ஆண்டுதோறும் மாங்காய் உற்பத்தி குறைகிறது; முக்கிய சீசனில் தரமான மாங்காய்களும் கிடைக்கவில்லை. அறுவடைக்கு பிறகு, மரங்களின் வளர்ச்சியும்,பூக்கள் பிடிப்பதும் பாதியாகி விட்டது,' என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, பல இடங்களில், மா மரங்களில், வளர்ச்சி ஊக்கியை அபரிதமாக பயன்படுத்துவது தெரியவந்தது.
குறுகிய காலத்தில், அதிக காய்கள் பிடிக்க இந்த வளர்ச்சி ஊக்கியை முறையான பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா கூறியதாவது: மா மரங்களில் அறுவடை முடிந்த பின்னர், பூக்கும் தன்மையை மேம்படுத்தவும், அதிக காய் பிடிக்கவும், 'கல்தார்' என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
இதனால், மா மரங்களின் இயற்கை வளர்ச்சி பாதிக்கிறது. இம்மருந்து மண்ணிலுள்ள நுண்ணுயிர்களை பாதித்து மண் வளமும் கெடுகிறது. மண் வளம் குறைவதால், மாம்பழங்களின் சுவை, சதைப்பகுதி மற்றும் தரம் குறையும்.
தொடர்ச்சியாக மருந்தை பயன்படுத்துவது சாகுபடியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். விவசாயிகள் கல்தார் மருந்து பயன்படுத்துவதை தவிர்த்து, மா மரங்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.