/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு: கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
/
பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு: கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு: கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு: கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2024 12:37 AM
பல்லடம்:பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில், பல்லடம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி., படிக்கும் ஆறு வயது சிறுவன், பள்ளி வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பின், எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். பெரும்பாலான தனியார் பள்ளி வாகனங்கள், குறுகிய வீதிகளிலும் கூட, வேக கட்டுப்பாட்டை மீறி அசுர வேகத்தில் இயங்குகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களை காட்டிலும் கூடுதலாக அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கதவுகள் இன்றியும், உதவியாளர்கள் இல்லாமல் பஸ்களை இயக்குவதும் வாடிக்கையாக உள்ளது. லைசன்ஸ் பெற்ற தகுதியுடைய நபர்களை நியமிப்பதில் சில தனியார் பள்ளிகள் அலட்சியம் காட்டுகின்றன.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், கடந்த காலங்களில் எண்ணற்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும், இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், தங்களது கடமையில் இருந்து தவறுகின்றனர்.
ஒவ்வொரு முறை இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது மட்டும், பெயரளவுக்கு கண்காணிப்பு நடக்கிறது. இதன் பிறகு, வழக்கம்போல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, விபத்து, உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, பள்ளி வாகனங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா, என்பது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

