/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காத்திருப்பு மையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
காத்திருப்பு மையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 25, 2024 09:55 PM
உடுமலை; உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் மற்றும் கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில், மலையடிவாரத்தில் காத்திருப்பு மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரக பகுதியில், ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க, இப்பகுதி மக்கள் உடுமலை வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள், மலையடிவாரத்திலுள்ள ஜல்லிபட்டி, உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் எரிசனம்பட்டி முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டியதுள்ளது. போக்குவரத்து வசதியில்லாத நிலையில், மலைவாழ் மக்கள் ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை வழியாக, வனப்பகுதியில், 7 கி.மீ., துாரம் கரடு முரடான மலைப்பாதையில், குடியிருப்புக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, மலைவாழ் மக்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையிலும், பொருட்கள் வாங்கி மலை பாதையில் நடந்து செல்வதற்கு ஓய்வெடுக்கும் வகையில், மலையடிவாரமாக உள்ள கொங்குரார்குட்டை அல்லது ஜல்லிபட்டியில் உரிய வசதிகளுடன் காத்திருப்பு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.