/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் நீர் விளையாட்டு போட்டி குளத்தில் வல்லுனர் குழுவினர் ஆய்வு
/
திருப்பூரில் நீர் விளையாட்டு போட்டி குளத்தில் வல்லுனர் குழுவினர் ஆய்வு
திருப்பூரில் நீர் விளையாட்டு போட்டி குளத்தில் வல்லுனர் குழுவினர் ஆய்வு
திருப்பூரில் நீர் விளையாட்டு போட்டி குளத்தில் வல்லுனர் குழுவினர் ஆய்வு
ADDED : ஜன 19, 2025 01:06 AM

திருப்பூர்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையில், 480 ஏக்கரில் காவிலிபாளையம் குளம் உள்ளது. கோவை மற்றும் அவிநாசி பகுதிகளின் வழியாக வரும் நீர்நிலைகளில் வழிந்தோடி வரும் நீர் இக்குளத்தை நிரப்புகிறது.
அத்துடன், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழும் இக்குளத்தில் தண்ணீர் வந்த நிலையில், தற்போது குளம் நிரம்பியுள்ளது.
இப்பகுதி மக்கள் இணைந்து, 'காவிலிபாளையம் படகு மற்றும் நீர் விளையாட்டு சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
குளத்தில் போதியளவு நீர் நிரம்பியுள்ளதால், நீர் விளையாட்டுகளை நடத்தும் அமைப்பான, 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' சார்பில் படகு விளையாட்டு நடத்த ஊர் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பிடித்துள்ள நிலையில், இளைய தலைமுறையினர் படகு சவாரி விளையாட்டில் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும்.
இதற்காக, காவிலிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அமெச்சூர், 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' அமைப்பின் செயலர் மெய்யப்பன் மற்றும் வல்லுனர் குழுவினர் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
காவிலிபாளையம் படகு மற்றும் நீர் விளையாட்டு சங்க தலைவர் மோகனசுந்தரம், செயலர் பிரபு, பொருளாளர் தினேஷ்குமார் கூறியதாவது:
நீர் விளையாட்டுகளில் தமிழக அளவில் வீரர்கள் உருவாகவில்லை. நீர் விளையாட்டு, ஒலிம்பிக் விளையாட்டிலும் இருப்பதால், அதில் அதிகளவு வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில், மேற்கு தமிழகத்தின் பெரிய குளமான காவிலிபாளையம் குளத்தில் நீர் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கவும், படகு போட்டி நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என, தமிழ்நாடு அமெச்சூர் 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' அமைப்பினரிடம் கோரிக்கை வைத்தோம்.
அதன் அடிப்படையில், அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான படகு போட்டியை இக்குளத்தில் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

