/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிபுணத்துவம் உச்சம்; வெற்றிச்சிகரம் நிச்சயம்
/
நிபுணத்துவம் உச்சம்; வெற்றிச்சிகரம் நிச்சயம்
ADDED : செப் 07, 2025 10:42 PM

திருப்பூர்; 'நிபுணத்துவத்தில் உச்சம் கொள்ள நாள்தோறும் தொழில்நுட்பத்தை நவீனமாக்கவும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டினால், நிறுவனங்கள் தொடர் வெற்றிகளைக் குவிக்கும்'' என்று ஹார்ட்புல்னெஸ் அமைப்பு நடத்திய தொழில் வளர்ச்சி பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில், திருப்பூர், கே.செட்டிபாளையம், ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் ஆசிரம தியான மையத்தில் தொழில் வளர்ச்சி குறித்த பயிலரங்கு நடந்தது. திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா வரவேற்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவி சுப்பையன் பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில்வேல் துவக்கி வைத்தார். அகில இந்திய பட்டய கணக்காளர் சங்க திருப்பூர் கிளை துணை தலைவர் ஹரிசங்கர், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
செயல்முறையாக்கம் கைகொடுக்கும்
ஹார்ட்புல்னெஸ் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், ஸீ சேஞ்ச் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் பேசியதாவது:
ஒரு வணிக நிறுவனத்துக்கு மனிதவளம், நிதி, மூலப் பொருட்கள், இயந்திரம் ஆகியவை அடிப்படையான விஷயங்கள். இந்த அடிப்படை காரணிகளை பயன்படுத்தும் அளவீடுகள், உற்பத்தி செயல்முறைகள் அனைத்து நிறுவனங்களிலும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றன. ஒரே பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த அளவீட்டு பயன்பாடும், செயல்முறையாக்கமும் எந்த அளவுக்கு சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான், ஒரு தொழில் நிறுவனத்தின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.
நவீன நுட்பத்தால் வளர்ச்சிப் பயணம்
விரிந்த தொலைநோக்குப் பார்வை, திறந்த மனதுடன் கூடிய ஆராய்ச்சி நடவடிக்கைகள், எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம், உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்தல், சமரசமற்ற செயலாக்கம், தொடர் கண்காணிப்பு, தக்க ஆலோசனைகள், விரிவான கலந்துரையாடல், புதிய மற்றும் மாற்றுச் சிந்தனைகள் போன்றவற்றை கொண்டுள்ள நிறுவனங்கள், படிப்படியாக நிபுணத்துவம் பெற்று உயர்வடைகின்றன. அந்நிறுவனங்கள் அதன் நிபுணத்துவத்தை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதன் உதவியுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. அதன் முடிவில், வளர்ச்சி பெற்று, தொடர் வணிக வெற்றிகளை சாதிக்கிறது.
சுதாரிப்பதுடன் நில்லாமல் பலம் பெறுவதும் அவசியம்
அரசின் கொள்கை முடிவுகள்; பருவநிலை மாற்றங்கள்; பேரிடர்கள் போன்ற முன்கணிக்க முடியாத வெளிப்புற காரணிகள், சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு, இத்தகைய நிறுவனங்கள், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் பலத்துடன் உள்ளன. தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள், தொடர் சிரமங்களை சந்திக்கின்றன. புறக்காரணிகளால் ஏற்படும் சிறு சலனம் கூட இத்தகைய நிறுவனங்களின் போக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
பயிலரங்கில் பங்கேற்றோருக்கு தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர்கள், அலுவலர்கள், மற்றும் சுய தொழில் முனைவோர் இதில் பங்கேற்றனர்.