/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாகின்றன
/
பின்னலாடை ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாகின்றன
ADDED : டிச 27, 2024 11:52 PM
திருப்பூர், ; ''சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில், 55 சதவீத பங்களிப்புடன் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். திருப்பூரில், 4,300 ஏற்றுமதி நிறுவனங்களும், அவை சார்ந்த, 20 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
நாட்டின், 21 மாநிலங்களை சேர்ந்த, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், திருப்பூர் பின்னலாடைத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு, இயங்கி வருகின்றனர்; வடமாநில தொழிலாளர் உட்பட, பின்னலாடைத் தொழிலில், 70 சதவீதம் பெண் தொழிலாளர் பயனடைகின்றனர்.
சர்வதேச போர் சூழல்
ரஷ்யா -- உக்ரைன் போர், இஸ்ரேல் போர் மற்றும் செங்கடல் கொள்ளையர் பிரச்னை போன்ற காரணங்களால், 2023 -24க்கான ஏற்றுமதி வர்த்தகம், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 30 ஆயிரத்து, 690 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஏற்றுமதியாளர்களின் தீவிர முயற்சியாலும், தங்களது பசுமை உற்பத்தி சாதனையை உலகிற்கு வெளிப்படுத்தியதாலும், கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடைந்து வருகிறது. முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும், மாதமாதம் ஏற்றுமதி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, நடப்பு (2024 - 25) நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது, 2022 -23ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 15 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த, 2022- 23ம் நிதியாண்டில் ஏற்றுமதியான, 34 ஆயிரத்து 350 கோடி ஏற்றுமதியை விட 5,000 கோடி அதிகம் இருக்கும். இது, திருப்பூர் கிளஸ்டரின் அதிகபட்ச ஏற்றுமதியாக இருக்கும் என, ஏற்றுமதியாளர்கள் சங்கம் கணித்துள்ளது.
35 சதவீத வளர்ச்சி
குறிப்பாக, 2023ம் ஆண்டு அக்., மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில், திருப்பூருக்கு 35 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம், திருப்பூருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
புதிய வாய்ப்பு
அமெரிக்காவில் புதிய அதிபர் பொறுப்பேற்றதும், சீனா பொருட்கள் இறக்குமதியாவதை கட்டுப்படுத்த, வரிகளை உயர்த்துவார்; கடந்த காலங்களில் அவரது நடவடிக்கை அப்படித்தான் இருந்துள்ளது. சீனாவை கட்டுப்படுத்த, பல்வேறு யுத்திகளைக் கையாளுவது, இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையும் என்று, சர்வதேச பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நிறுவனங்கள்
'வால்மார்ட்', 'கேப்', 'காஸ்ட்டோ', 'மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்', 'ப்ரீமார்க்' மற்றும் சில முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், தரமான தயாரிப்புகளுக்காக திருப்பூரையே தேர்வு செய்கின்றன. திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியால் கவரப்பட்டு, திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான முன்னணி 'பிராண்ட்'டுகள் திருப்பூர் ஆடை உற்பத்தியை விரும்புகின்றனர். இத்தகைய சாதகமான வாய்ப்புகள், திருப்பூரை, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் என்ற நிலைக்கு உயர்த்தும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பூருக்கு திரும்பிவரும் வர்த்தகம்
அமெரிக்கா, ஐரோப்பியாவை சேர்ந்த முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், வங்கதேசத்தில் இருந்து திருப்பூரை நோக்கி திரும்பிவர துவங்கியுள்ளன. முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், திருப்பூரை மையமாக கொண்டு செயல்படவே விரும்புகின்றனர். வங்கதேசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு வகையான வாய்ப்பாக மாறியிருக்கிறது.
வரும், 2027 முதல், அமெரிக்கா - வங்கதேசம் இடையேயான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காலாவதியாகிறது; இதை புதுப்பிக்க வாய்ப்பு மிக குறைவு என்றே சர்வதேச வர்த்தகர்கள் கணித்துள்ளனர். ஐரோப்பிய சில்லரை வர்த்தகர்களும், திருப்பூர் ஆடைகளையே பெரிதும் விரும்புகின்றனர்.
வங்கதேசத்தில் உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதும், வர்த்தகம் திசைமாற காரணமாக அமைந்துள்ளது. இது, திருப்பூருக்கு புதிய வாய்ப்புகளை வாரிக்கொடுக்க இருப்பதாக, முன் னணி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.