/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர் குழு டில்லி பயணம்
/
ஏற்றுமதியாளர் குழு டில்லி பயணம்
ADDED : செப் 01, 2025 12:29 AM
திருப்பூர்; மத்திய அரசின் நிவாரண உதவி உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், நாளை (2ம் தேதி) டில்லி சென்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாளை சந்திக்க உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்கக் குழு, ஏற்றுமதியாளர் இடர்களைக் களைவதற்கான முன்னெடுப்புகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து, ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். நான்கு சீசன் என்ற அடிப்படையில், 90 நாட்கள் இடைவெளியில் ஆர்டர் மீது உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறோம். அதன்படி, தற்போதைய குளிர்கால ஆர்டர் மீது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது; அதில், 1,500 கோடி ரூபாய்க்கான ஆடைகள், வரி பகிர்வின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வரி, 50 சதவீதமாக உயர்த்தப்பட்ட பிறகு, மீதியுள்ள ஆர்டர் மீதான உற்பத்தி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மத்திய அரசு நிவாரண உதவியை, போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். வட்டி சமன் செய்யும் திட்டத்தில், 2 சதவீதமாக உள்ள வரியை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 'டியூட்டி டிராபேக்'2 சதவீதமாக இருப்பதை, 10 சதவீதமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
மூலப்பொருள் இறக்குமதி உட்பட, உற்பத்தியில் கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப வழங்கும் திட்டத்தில், 2.50 சதவீதம் என்பதை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களை பாதுகாக்க, அவசரகால உதவியாக, 5 சதவீதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக வளர்ந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை, தற்போதைய அமெரிக்க வரிவிதிப்பு எனும் பேரிடரில் இருந்து காப்பாற்ற வேண்டும்.