/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதுவும் கடந்து போகும்: ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
/
இதுவும் கடந்து போகும்: ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ADDED : ஆக 31, 2025 11:58 PM

திருப்பூர்; அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, திருப்பூர் பின்னலாடைத்துறையினருக்கு சோதனைக்காலமாக அமைந்திருக்கிறது. பல்வேறு சோதனைகளையும், சவால்களையும் தாண்டி 'பீனிக்ஸ்' பறவை போல மீண்டெழுந்து, வளர்ச்சிப்பாதையில் பயணித்த வரலாறு, திருப்பூருக்கு உண்டு. 'இந்தப் பிரச்னையும் தீர்க்கப்படக்கூடியதுதான்.
தகுந்த மாற்றுத்தீர்வை அரசு வழங்கினால், வர்த்தக வாய்ப்பை கை நழுவ விடாமல், தொழிலாளர் வேலை வாய்ப்பையும் பாதுகாக்கலாம். இதுவும் கடந்துபோகும்' என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஏற்றுமதியாளர்கள் சிலர் நம்முடன் பகிர்ந்தவை:
தைரியமாக எதிர்கொள்கிறோம்
சக்திவேல்: டிரம்ப் விதித்துள்ள வரிக்கு எதிராக, அந்த நாட்டில் நீதிமன்றமே, கேள்வி எழுப்பியுள்ளது. அந்நாட்டு மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர். அபரிமிதமான வரி உயர்வை சமாளித்து, வர்த்தகத்தை தக்க வைக்க ஏதுவாக, திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு வட்டி மானியம், கடனுதவி, 'டியூட்டி டிராபேக்' போன்ற சலுகை வேண்டும்.
அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு, அரசு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும். திருப்பூர் எத்தனையோ பிரச் னையை சமாளித்து, கடந்து வந்துள்ளது; எப்போதும் தொய்வு ஏற்படாது. இந்த பிரச்னையையும் தைரியமாக எதிர்கொண்டு வருகிறோம். அமெரிக்காவுக்கு 100 சதவீதம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை சிறப்பு நிவாரணம் வழங்கி, நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
அரசிடம் 6 கோரிக்கைகள்
மனோஜ்குமார்: முதல்கட்ட வரிவிதிப்பு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது; திடீரென வர்த்தக விசாரணை அதிகரித்தது. இரண்டாம் நிலை வரி விதித்த பின், கேள்விக்குறியாக மாறியுள்ளது. வர்த்தகர்கள், மற்ற நாடுகளுடன் பேசி வர்த்தகம் செய்ய துவங்கிவிட்டால், மீண்டும் வரவழைப்பது மிகவும் சிரமம். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்கா அதிகபட்ச நுகர்வு சந்தையை கொண்டது. ஒரே வர்த்தகரிடம், அதிகபட்சமாக வர்த்தகம் செய்யலாம். அமெரிக்காவுக்கு மாற்றான சந்தையை கண்டறிந்து வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளாகும். மத்திய அரசு விரைந்து வர்த்தகர்களை தக்கவைக்க தகுந்த உதவிகளை செய்ய வேண்டும்.
நஷ்டத்தை எதிர்கொள்ள உதவி அவசியம்; இரண்டு சதவீதமாக உள்ள, 'டியூட்டி டிராபேக்' 5 சதவீதம் வழங்க வேண்டும். ஆர்.ஓ.சி.டி.எல்., எனப்படும், ஏற்கனவே செலுத்திய வரி செலுவை ஈடுகட்டும் சலுகையை, 10 சதவீதமாக உயர்த்தி, வட்டி மானியம், கடன் நீட்டிப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என, ஆறு கோரிக்கைகள் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பேசினால் தான் தீர்வு
சுனில்குமார்: மத்திய அரசு பேச்சு வார்த்தை வாயிலாக தீர்வு காண வேண்டும். அப்போது மட்டுமே தீர்வு கிடைக்கும்; மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்ற முடிவு உடனடியாக வெற்றியடையாது; படிப்படியாக மாற்றலாம். தொழிலாளர் வேலைவாய்ப்பு என்பதும் மிக முக்கியமானது. தற்காலிகமாக, மத்திய அரசு நிவாரண உதவி வழங்கினால், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் நஷ்டத்தை மட்டும் குறைக்கலாம்; மீண்டும் ஏற்றுமதி வர்த்தகத்தை துவக்க, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். 'டியூட்டி டிராபேக்', வட்டி மானியம் போன்ற சலுகை தற்போது அவசியம்.
25% டிராபேக் வழங்கலாம்
சின்னசாமி, இணைச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:
ஏற்றுமதி வர்த்த கத்தில், பாதிப்பு குறைவாக இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். அமெரிக்காவின் முதல் கட்ட வரியை சமாளிக்க முடியும். இரண்டாம்நிலை வரி, 25 சதவீதத்தை நினைத்தே பார்க்க முடியாது. மத்திய அரசு, 'வைரம்' உள்ளிட்ட ஆவண ஏற்றுமதிக்கு, 25 சதவீதம் வரை 'டிராபேக்' சலுகை அறிவித்துள்ளது. அதேபோல், ஆயத்த ஆடை அல்லது பின்னலாடைகளுக்கு, தற்காலிகமாக, 25 சதவீதம் 'டிராபேக்' வழங்கினால், நெருக்கடியை சமா ளிக்கலாம். மாநில அரசும், மின்கட் டணத்தில், 50 சதவீத சலுகையும், உயரழுத்த மின்சாரத்துக்கான நிலை கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முன்வர வேண்டும்.
சவாலை சமாளிக்க வேண்டும்
அமெரிக்காவுக்கு மாற்றாக, வேறு நாடுகளை தேடுவது உடனடியாக இயலாது. மற்ற நாடுகளில், 50 'டி-சர்ட் வாங்கினால், அமெரிக்காவில், 100 வாங்குவர். ஐரோப்பிய யூனியனில், 27 நாடுகள் மொத்தமாக வாங்குவதை காட்டிலும், அமெரிக்கா அதிகமாக வாங்குகிறது. ஜப்பான் போன்ற புதிய மார்க்கெட்டை இனிமேல் முயற்சிக்கலாம். புதிய ஆராய்ச்சி செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அடுத்து என்ன செய்வதென தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு, 25 சதவீத வரி குறைய வாய்ப்பு இருக்கலாம். இருப்பினும், அதுவரை நிலையை சமாளித்தாக வேண்டும். மத்திய அரசு, கண்டிப்பாக அவசர கால நிவாரண உதவி வழங்க வேண்டும்.
திடீரென எழுந்த சவாலை சமாளித்தால் மட்டுமே, அடுத்து என்ன செய்யலாம் என்று தெளிவாக கண்டறிய முடியும். அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு மட்டும் பிரச்னை இல்லை; சாய ஆலைகள், நிட்டிங், பிரின்டிங், 'ஸ்பின்னிங்' என, அனைத்து பிரிவுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கும். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, 10 சதவீதம் அளவுக்கு, அரசு நிவாரண உதவி மிகமிக அவசியம்.
- ராஜ்குமார்,
துணைத்தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.