/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதினா விலை சரிவு : விவசாயிகள் கவலை
/
புதினா விலை சரிவு : விவசாயிகள் கவலை
ADDED : டிச 23, 2024 10:09 PM

உடுமலை; வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பு சீசனில் புதினாவுக்கு போதிய விலை கிடைக்காமல், உடுமலை வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, புதினா சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, பாலப்பம்பட்டி சுற்றுப்பகுதியில் இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். செம்மண் நிலங்களிலும், சில இடங்களில் தென்னந்தோப்பில் ஊடுபயிராகவும், புதினா சாகுபடி செய்கின்றனர். நடவு செய்த, 60 நாட்களில் புதினா பறிக்கும் நிலைக்கு தயாராகி விடுகிறது.
சீதோஷ்ண நிலை ஒத்துழைத்தால், ஏக்கருக்கு, 5 ஆயிரம் கிலோ வரை, விளைச்சல் இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கடந்த சீசனில், புதினா கிலோவுக்கு, 40 ரூபாய் வரை விலை கிடைத்தது. நடப்பு சீசனில், கிலோவுக்கு, 10 ரூபாய் குறைந்து, 30 ரூபாய் மட்டுமே கிடைத்து வருகிறது. உள்ளூர் சந்தைக்கு, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதினா வரத்து இருப்பதால், நிலையான விலை கிடைக்கவில்லை. இவ்வாறு, தெரிவித்தனர்.
அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.