/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடும்ப மகிழ்ச்சியே பெண்களின் மகிழ்ச்சி'
/
'குடும்ப மகிழ்ச்சியே பெண்களின் மகிழ்ச்சி'
ADDED : செப் 08, 2025 06:21 AM

திருப்பூர்; 'குடும்பத்தின் மகிழ்ச்சியே பெண்களின் மகிழ்ச்சி; பெண்கள் இல்லையென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது' என, வழக்காடு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'பெண்கள் அதிக நகைச்சுவையாளர்கள் என்பது குற்றம்' என்கிற தலைப்பில் வழக்காடு மன்றம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
பெண்கள் அதிக நகைச்சுயைாளர்கள் என்பது குற்றமே என, ரவிக்குமார்; அதற்கு மறுப்பு தெரிவித்து, மலர்விழியும் வாதாடினர். இருதரப்பினரின் வாதங்களுக்குப்பிறகு, நடுவர் கவிதா ஜவஹர் தீர்ப்பளித்து பேசியதாவது:
நாம் மற்றவர்களை பார்த்து, இவர்கள்தான் சிறப்பானவர்கள் என நினைக்கிறோம். இப்படி நினைத்தால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. நம்மிடம் இருப்பது சிறந்தது என எப்போது நினைக்கிறோமோ, அப்போதுதான், மகிழ்ச்சி பிறக்கும்.
பிறருடனான ஒப்பீடு தான் வாழ்வில் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பணமிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கிறோம். பிறருடன் எதை அடிப்படையாக கொண்டு ஒப்பிடுகிறோம் என்பது முக்கியம். படுத்த உடனே துாங்குகின்ற நிம்மதியை வைத்து ஒப்பிட்டால், ஒன்றுமே இல்லாதவர் உயர்ந்தவராகிறார்.
கணவன் - மனைவியிடையே புரிதல், விட்டுக்கொடுத்தல் இருந்தால், வாழ்வில் எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அது சுமூகமாக முடிந்துவிடும். பெண்கள், தங்கள் கனவுகள், கற்பனைகளை தொலைத்துவிட்டுத்தான், புகுந்தவீட்டுக்கு வருகின்றனர். தங்கள் வாழ்க்கையை, அந்த குடும்பத்துக்காகவே அடகு வைக்கின்றனர்.
குடும்பம் சிரித்தால், பெண்கள் சிரிக்கின்றனர்; அவர்கள் மகிழ்ந்தால், இவர்கள் மகிழ்கின்றனர். பெண்கள் நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் என்கிற வழக்கை தள்ளுபடி செய்கிறேன். குடும்பத்தின் மகிழ்ச்சிதான், பெண்களின் மகிழ்ச்சி; பெண்கள் இல்லையென்றால், குடும்பம் மகிழ்ச்சியற்றதாகிவிடும். இவ்வாறு, தீர்ப்பளித்தார்.