ADDED : செப் 08, 2025 06:22 AM

பல்லடம்; நேற்று இரவு முழு சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் அறிவியல் இயக்கம் சார்பில், பல்லடம் தினசரி மார்க்கெட் வளாகத்தில், தொலைநோக்கி அமைக்கப்பட்டு இருந்தது. இரவு, 8:00 மணி முதல், சந்திர கிரஹணத்தை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமான மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம்பெண்கள் மார்க்கெட் பகுதியில் திரண்டனர்.
ஆனால், நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால், நிலவு தெரியவில்லை. தொலைநோக்கி மூலமாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், நிலவு தெரியாததால், ஆர்வத்துடன் வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
அறிவியல் இயக்க பொறுப்பாளர் அஜித்குமார் கூறுகையில், 'இரவு, 9:00 மணிக்கு மேல்தான் நிலவு தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வானத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. இரவு 10:00 வரை மேகமூட்டம் நீடித்ததால் கிரஹணம் தெரியவில்லை' எனவும் கூறினார்.