/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதைப்பு பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பு
/
விதைப்பு பணியில் விவசாயிகள் சுறுசுறுப்பு
ADDED : அக் 07, 2025 01:11 AM

பொங்கலுார்:மானாவாரி நிலங்களில் பெரும்பாலும் மாட்டுத் தீவனத்துக்காக, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தீவிரமடையும்.
அதற்கு முன்னதாகவே, விதைப்பு பணியை மேற்கொண்டால்தான் பயிர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புரட்டாசி மாதத்தில் வெப்ப சலன மழை பெய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு பணியை மேற்கொள்வர்.
இந்த மாதம் துவக்கத்திலிருந்தே போதிய மழை இல்லை. கடும் வெப்பம் வாட்டியதால் பல இடங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மழை பெய்யாதா என்று விவசாயிகள் ஏக்கத்தில் காத்திருந்தனர்.
புரட்டாசி பட்டம் துவங்கி மூன்று வாரங்களான நிலையில் தற்போது தான் மழை பெய்ய துவங்கி உள்ளது. இதனால், மழை பெய்த பகுதிகளில் விவசாயிகள் விதைப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொங்கலுார் வட்டார விவசாயிகள் சிலர் கூறுகையில், 'நல்ல மழை பெய்யட்டும் என்று காத்திருந்தால் ஐப்பசி, கார்த்தி அடைமழையில் பயிர்கள் மழை நீரில் அழுகிவிடும். அதற்கு முன், அரை அடி உயரமாவது பயிர்கள் வளர்ந்தால்தான் நீரில் மூழ்காமல் தாக்குப்பிடிக்கும்.
முன்கூட்டியே கோடை உழவு செய்த வயல்களில் குறைவான மழை பெய்தாலும் விதைப்பு பணியை முடிக்க, தீவிரப்படுத்தி உள்ளோம்,' என்றனர்.