/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் வாக்குவாதம்: கலெக்டர் திடீர் வெளிநடப்பு
/
விவசாயிகள் வாக்குவாதம்: கலெக்டர் திடீர் வெளிநடப்பு
விவசாயிகள் வாக்குவாதம்: கலெக்டர் திடீர் வெளிநடப்பு
விவசாயிகள் வாக்குவாதம்: கலெக்டர் திடீர் வெளிநடப்பு
ADDED : ஏப் 26, 2025 01:58 AM
திருப்பூர்:பி.ஏ.பி., தண்ணீர் தொடர்பாக விவசாயிகள் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம் முற்றியதால், குறைகேட்பு கூட்டத்திலிருந்து திருப்பூர் கலெக்டர் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
பி.ஏ.பி., (பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசும்போது, 'அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது; பி.ஏ.பி., கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
குழாய்கள் பதித்து வழிநெடுக தண்ணீர் திருடப்படுகிறது. தண்ணீர் திருட்டு குறித்த புகார்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடைமடைக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை யென்றால், வரும் மே1ம் தேதி தொழிலாளர் தின கிராமசபாவை புறக்கணிப்போம்' என்றார்.
இதற்கு பதிலளித்த பி.ஏ.பி., பொள்ளாச்சி மண்டல செயற்பொறியாளர் நரேந்திரன், 'மற்ற பகிர்மான பகுதிகள் போலவே, வெள்ளகோவில் பகிர்மான பகுதிகளுக்கும் சமச்சீர் பாசனம் வழங்கப்படுகிறது' என்றார்.
பி.ஏ.பி., விவசாயிகள், 'சமச்சீர் பாசனம் என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்' என்றனர். செயற்பொறியாளரோ, 'ஏங்க சமச்சீராக வழங்கப்படுகிறதுனு சொல்றேன்ல… எந்த அடிப்படையில் சமச்சீராக வழங்கப்படவில்லைனு சொல்றீங்க' என கடுமையாக கேட்டார்.
விவசாயிகள் அனைவரும், 'கடைமடைக்கு தண்ணீர் வரவில்லைனு சொல்றோம்ல. நாங்க தயாரா இருக்கிறோம்' என்றனர்.
பி.ஏ.பி., அதிகாரி - விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் டென்ஷனான கலெக்டர் கிறிஸ்துராஜ், 'பத்து நிமிடம் பிரேக்' என சொல்லிவிட்டு, அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உள்பட மேடையில் அமர்ந்திருத்த அனைத்து அதிகாரிகளும் கிளம்பிவிட்டனர். இதனால், 40 நிமிடங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நிறுத்தப்பட்டது. கலெக்டர் வராததால், வேளாண் அதிகாரிகள், ஒப்புக்கு கூட்டத்தை நடத்தி முடித்தனர். விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் யாரும் பதிலளிக்கவில்லை.