/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பி.ஏ.பி., கால்வாய்; உள்ளாட்சி அமைப்புகள் மீது விவசாயிகள் புகார்
/
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பி.ஏ.பி., கால்வாய்; உள்ளாட்சி அமைப்புகள் மீது விவசாயிகள் புகார்
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பி.ஏ.பி., கால்வாய்; உள்ளாட்சி அமைப்புகள் மீது விவசாயிகள் புகார்
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பி.ஏ.பி., கால்வாய்; உள்ளாட்சி அமைப்புகள் மீது விவசாயிகள் புகார்
ADDED : டிச 20, 2024 10:50 PM

உடுமலை; பி.ஏ.பி., கால்வாய் கரைகளில், குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், விவசாயிகள் பேசியதாவது:
பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வழியோரத்தில் அமைந்துள்ள, ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பெரிய கோட்டை ஊராட்சிகள் மற்றும் உடுமலை நகராட்சியின் குப்பைக்கிடங்காக கால்வாய் கரை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், வழியோரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கால்வாய் கரையில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதோடு, மீன், இறைச்சி கழிவுகள் கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், கழிவுகள் நேரடியாக பாசன நீரில் கலந்து, மடைகள் அடைப்பு ஏற்படுவதோடு, விவசாய நிலங்களும் பாதிக்கிறது.
துர்நாற்றம், சுகாதார கேடு, தொற்று நோய் பரவல் என ஏராளமான பிரச்னைகள் ஏற்படுவதோடு, பொதுமக்கள், கால்நடைகளின் குடிநீர் மாசடைந்து வருகிறது.
பல ஆண்டுகளாக இதற்கு தீர்வு காண பல முறை மனு அளித்தும், ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். கால்வாய் கரை குப்பை கிடங்காக மாற்றப்படுவதை தடுக்கவும், குடியிருப்பு பகுதிகளில், கம்பி வேலி அமைக்கவும் வேண்டும்.
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், சிதிலமடைந்தும், கழிவுகள் தேங்கியும் உள்ள உடுமலை கால்வாய் முழுமையாக துார்வாரி புதுப்பிக்க வேண்டும்.
வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு, கிளைக்கால்வாய், அரணி வாய்க்கால்களை துார்வார, திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், பொதுப்பணித்துறை அறிக்கை வழங்கியும், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இவ்வாறு, பேசினர்.