/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொப்பரை உலர் களம் அமைக்க உதவி; அரசிடம் எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
கொப்பரை உலர் களம் அமைக்க உதவி; அரசிடம் எதிர்பார்க்கும் விவசாயிகள்
கொப்பரை உலர் களம் அமைக்க உதவி; அரசிடம் எதிர்பார்க்கும் விவசாயிகள்
கொப்பரை உலர் களம் அமைக்க உதவி; அரசிடம் எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : ஆக 18, 2025 08:50 PM

உடுமலை; கொப்பரை உற்பத்திக்கான உலர் களங்களை, அரசு அமைத்து உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக பராமரித்தால், பயனுள்ளதாக இருக்கும் என இரு வட்டார விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய்க்கு வெளிமார்க்கெட்டில், கொப்பரையை ஆதாரமாகக்கொண்டே, விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகளும், தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்; அரசும், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், கொப்பரை விற்பனைக்கு ஏலம் நடத்துகிறது.
இவ்வாறு, பிரதான சாகுபடியில், கொப்பரை உற்பத்தியே விலைக்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், உடுமலை சுற்றுப்பகுதியில், கொப்பரை உற்பத்திக்கான உலர் களங்கள் போதுமானதாக இல்லை.
சில தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், அமைக்கப்பட்ட சோலார் உலர் கலன்களும் பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக மாறி விட்டன.எனவே, வட்டாரவாரியாக, கூடுதலாக உலர் களங்கள் அமைக்க அரசு உதவ வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
தென்னை சாகுபடி சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, கொப்பரை உற்பத்திக்கான உலர் களங்கள் அமைக்க அதிக செலவாகிறது.
எனவே, சிறு, குறு விவசாயிகள் கொப்பரை உற்பத்தி செய்ய முடியாமல், பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது, வட்டார வாரியாக, தென்னை வளர்ச்சி வாரியத்தின், தென்னை சாகுபடியாளர்கள் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இத்தகைய விவசாயிகளின் கூட்டமைப்பு வாயிலாக , கொப்பரை உற்பத்திக்கான உலர் களம் அமைத்து பராமரிக்க அரசு உதவ வேண்டும்.
இதனால், கிராமப்புறங்களில், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான விவ சாயிகளும் பயன்பெறுவார்கள். இது குறித்து, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை வாரியம் வாயிலாக ஆய்வு செய்து, அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.