/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2025 03:18 AM

திருப்பூர்: 'திருப்பூர், அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாவதை தவிர்க்க, அணை நீரை, உப்பாறு, வட்ட மலைக்கரை அணையில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பி.ஏ.பி., பாசனம் சார்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. பொதுவாக, பி.ஏ.பி., நீர், தாராபுரம் பகுதியில் உள்ள உப்பாறு அணை மற்றும் வெள்ளிகோவிலில் உள்ள வட்டமலைக்கரை அணையில் நிரப்பப்படும்.
இதன் வாயிலாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.முந்தைய ஆண்டுகளில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தற்போது மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்தி, சோளம் மற்றும் கால்நடை தீவனப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலம் பயன்பெறும் இந்தாண்டு தென் மேற்கு பருவமழையில் திருமுர்த்தி அணை நிரம்பி, அமராவதி அணையில் வெள்ளம் பெருக்கெடுத்த போதும், உப்பாறு, வட்டமலைக்கரை அணைக்கு நீர் திறந்துவிடப்படவில்லை என, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக டிசம்பர் மாதம், உப்பாறு, வட்டமலைக்கரை அணைகள் நிரப்பப்படும். ஆனால், இந்தாண்டு பி.ஏ.பி., பாசனத்தில் நீர் இருந்தும், திறந்துவிடப்படவில்லை. இந்த இரு அணைகளில் நீர் நிரப்புவதன் வாயிலாக, உப்பாறு மற்றும் வட்டகலைக்கரை அணை சார்ந்து, தலா, 6,000 ஏக்கர் வீதம், 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். அதோடு, 25 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும்; இதனால், 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மறைமுக பலன் பெறும் என்பது விவசாயிகளின் கணக்கு.
வீணாகும் 8 டி.எம்.சி. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் காளிமுத்து கூறியதாவது:
'அமராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை, வட்டமலை, உப்பாறுக்கு திருப்பி விட வேண்டும்' என கடந்த, 2007ல் வலியுறுத்த துவங்கினோம். கடந்த, 2008ல் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 'உள்நதி நீர் இணைப்பு' என்ற பெயரின் அதற்கான திட்டத்தை தயாரித்தனர்.
பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டது. 'இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, கடந்த, 2021 முதல் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். இந்தாண்டும் கூட தென்மேற்கு பருவமழையில், அமராவதி ஆற்றில், 8 டி.எம்.சி., நீர் வீணாக வெளியேறியது.
எனவே, அக்கறைப் பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வட்ட மலைக்கரை அணைக்கு, நீரேற்றம் செய்யும் வகையிலான திட்டம் ஏற்படுத்த வேண்டும்.
அதே போன்று, தாரா புரம் கிராமம், வடுகபாளையம் தாளக்கரை பகுதியில் தடுப்பணை கட்டி, 14 கி.மீ., துாரமுள்ள உப்பாறு அணைக்கு நீரேற்ற திட்டம் வாயிலாக நீரை கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்; ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையில் இந்தாண்டு, தென்மேற்கு பருவ மழையில் திருமூர்த்தி அணை நிரம்பி நீர் வெளியேறுகிறது. வெளியேறும் உபரிநீர் பாலாறு வழியாக கேரளாவுக்கு திருப்பி விடுகின்றனர்.
மாறாக, தமிழகத்திற்குள் உள்ள உப்பாறு, வட்டமலைக்கரை அணைக்கு திறந்துவிட அதிகாரிகளுக்கு மனமில்லை. எனவே, நீர் மேலாண்மை திட்டத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

