/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியை சமாளிக்க மின் இணைப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வறட்சியை சமாளிக்க மின் இணைப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
வறட்சியை சமாளிக்க மின் இணைப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
வறட்சியை சமாளிக்க மின் இணைப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2025 10:24 PM
உடுமலை; வறட்சியை சமாளிக்க போர்வெல்கள் அமைத்தாலும், நிலத்தடி நீரை இறைக்க, மின் இணைப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை மின்பகிர்மான வட்டத்தின் கீழ், பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம், கொங்கல்நகரம், வேலுார் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருவதால், இப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, வறட்சி துவங்கியுள்ளது.
நீண்ட கால பயிரான தென்னை மரங்களை காப்பாற்ற, ஆயிரம் அடி போர்வெல் அமைத்து, தண்ணீர் எடுக்க விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
பல போராட்டங்களுக்கு பிறகு நிலத்தடியில் நீர்மட்டம், கிடைத்தாலும், அதை 'பம்ப்' செய்து, மரங்களுக்கு பாய்ச்ச மின் இணைப்பு இல்லாமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின்வாரியத்தில், விவசாய மின் இணைப்புக்கு, விண்ணப்பங்கள் சீனியாரிட்டி அடிப்படையில், பரிசீலிக்கப்பட்டு, மின் இணைப்பு முன்பு வழங்கப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால், இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மேலும், 'தட்கல்' விரைவு திட்டத்திலும், விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இந்த விவசாயிகள் ஆயில் என்ஜினை பயன்படுத்தி, கிணறுகளிலிருந்து தண்ணீரை இறைக்கின்றனர்; இம்முறையில், அதிக ஆழமுள்ள போர்வெல்களிலிருந்து தண்ணீர் எடுக்க இயலாது.
விவசாயிகள் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், 'வறட்சியால், ஆயிரம் அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் சென்றுள்ளதால், மின் மோட்டார்களால் மட்டுமே தண்ணீர் இறைக்க முடியும். குறித்த நேரத்தில் மின் இணைப்பு அளித்தால், வரும் கோடை காலத்தில், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகுவதை தவிர்க்க முடியும்.
விவசாய பயன்பாட்டுக்கு குறைந்த கட்டணம் அடிப்படையிலான திட்டத்திலும் உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' கூறப்பட்டுள்ளது.